Skip to main content

குழந்தை உயிரிழந்த விவகாரம்; 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
The issue of a child who fell into a sewage tank Bail petitions of 3 people dismissed

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த பழனிவேல் - சிவசங்கரி தம்பதியின் மூன்று வயதுக் குழந்தையான லியா லட்சுமி, எல்.கே.ஜி படித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது. இந்த சேதமடைந்த கழிவுநீர் பகுதியில், லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அந்த இரும்புத்தகடு முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. இதில், லியா லட்சுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார்.

அப்போது குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட பள்ளி நிர்வாகிகள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இருப்பினும் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த லியா லட்சுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் பள்ளியின் ஓட்டுநர் கோபால் இரும்பு கம்பியை வைத்து சிறுமி சடலத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையின் உடலை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, இந்த குழந்தை, எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது?, பள்ளி கழிவுநீர் தொட்டி சரிவர மூடப்படவில்லையா? கேள்விகளை முன் வைத்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகப் பள்ளியின் தாளாளர் எமில்டா, தலைமை ஆசிரியர் டொமில்லா மேரி மற்றும் வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த மனுவை  நீதிபதி மணிமொழி விசாரித்தார். அரசு தரப்பு மற்றும் தனியார் பள்ளியின் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி 3 பேரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்