ஆண்கள், பெண்கள் எனப் பாராமல் அனைவருக்கும் ஒரே வாரத்தில் 3 கிராம மக்களின் தலைகள் வழுக்கையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தின் கீழ் ஷேகான் தாலுகா உள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா என்ற 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த 1 வாரத்தில் பெருமளவு தலை முடி உதிர்வு ஏற்பட்டு பலரும் வழுக்கை தலையாக மாறுகின்றனர்.
ஆண், பெண் எனப் பாராமல் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு உண்டாகுகின்றனர். திடீரென்று, முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை தலையாக மாறுவதால் அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பீதியில் உரைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த உயர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் அந்த கிராமங்களில் உள்ள தண்ணீர் மாதிரிகள் மற்றும் கிராம மக்களின் முடி மற்றும் தோல் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை தலையாகும் பிரச்சனையால் சுமார் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரங்களால் ஏற்படும் நீர் மாசுவினால் பெருமளவு முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.