நேற்று கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், 'தமிழ் ஒரு சனியன்' என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் 'பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்' என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை நீலாங்கரை பகுதியிலுள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிட்ட போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபுரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ''கரைந்து கொண்டிருக்கும் இயக்கமாக அவர் தலைமையில் இருக்கின்ற நாம் தமிழர் கட்சி இருக்கிறது. அதனால் ஏதாவது ஒன்றை இப்படி பேசி தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக செய்யும் முயற்சிகள் தான் இது. அதற்காகவே ரூம் போட்டு சிந்திப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
தினந்தோறும் வாழ்ந்து மறைந்த தலைவர்கள் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவர்கள். இருட்டில் கிடந்த இந்த சமுதாயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தலைவர்கள், விடிவெள்ளிகள், பகுத்தறிவுவாதிகள் போன்றவர்களை கொச்சைப்படுத்தினால் தான் தன்னுடைய பெயர் அடையாளம் காட்டப்படும் என்பதால் இவ்வாறு செய்கிறார். கரைந்து கொண்டிருக்கின்ற அவருடைய இயக்கத்தை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டுமே தவிர, வாழ்ந்து மறைந்த நாட்டுக்கு தொண்டாற்றிய தலைவர்களை விமர்சனம் செய்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.