சென்னையில் பேருந்து தினம் எனப்படும் ''பஸ் டே'' கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்த ''பஸ் டே'' கொண்டாட்டத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கல்லூரி மாணவர்களிடம் இருந்த இந்த பழக்கம் தற்போது பள்ளி மாணவர்களையும் தொற்றியுள்ளது.
சென்னை வள்ளலார் நகர் கள்ளிகுப்பம் இடையே இயக்கப்படும் அரசு பேருந்தில் பாடி வில்லிவாக்கம் இடையே ஏறிய பள்ளி மாணவர்கள் பஸ்ஸின் முன்பக்கம் ஒரு பேனரை கட்டிவிட்டு, மாலை போட்டு பேருந்து தினம் என கூறி பேருந்தின் படி மற்றும் கூரை மீது ஏறி கூச்சலிட்டபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேனரில் சிங்காரம்பிள்ளை பள்ளி என்ற பெயரும் இருந்தது. இப்படி பள்ளி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த இது குறித்து பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்க போலீசார் முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.