
விருதுநகரில் குடித்துவிட்டு குடிபோதையில் மகளை அடிக்கடி துன்புறுத்தி வந்த மருமகனை மாமனாரே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் முத்துக்குட்டி என்பவர் அவருடைய மகள் மாசானம் மற்றும் மருமகன் நாகராஜன் ஆகிய இருவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், மருமகன் நாகராஜ் மனைவி மாசானத்தின் மீது சந்தேகமடைந்து அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் ரகளை செய்ததோடு மகளை அடித்து துன்புறுத்தி உள்ளார். வழக்கம்போல் நேற்றும் மது அருந்திவிட்டு வந்த நாகராஜ் மனைவியை தாக்கியதோடு மாமனாரையும் தாக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முத்துக்குட்டி கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் நாகராஜின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையில் ஈடுபட்ட மாமனார் முத்துக்குட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜபாளையத்தில் மாமனாரே மருமகனை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.