Skip to main content

'தனியார் வங்கியில் பாதிப்பு... கரூர் தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டும்' - எம்.பி ஜோதிமணி வேண்டுகோள்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

'Impact on private bank ... Karur should save businesses' - MP Jothi Mani's request!

 

கரூர் தொகுதி (காங்கிரஸ்) எம்.பி.யான ஜோதிமணி, இன்று (18 ஆம் தேதி) மாலை கரூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது,

 

"தனியார் வங்கியான கரூர் லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு, மத்திய நிதியமைச்சகம், வர்த்தகம் தொடர்பான தடை விதித்துள்ளது. கரூரில் நிதி நிறுவனங்களும், பேருந்து, கட்டுமானம், கொசுவலை, ஜவுளி ஏற்றுமதி தொழில்களும் ஒன்றுக்கொன்று ஆதரவாக நின்று வளர்ந்தவை. விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்துறையினரின் பங்களிப்பில்தான் லக்ஷ்மி விலாஸ் வங்கி உருவானது. இதனுடைய இன்றைய நிலை மிகவும் வருத்தமளிக்கிறது. ஜவுளி, கொசுவலை, பேருந்து, லாரி உள்ளிட்ட போக்குவரத்து நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பெருமளவில் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் தான் கணக்கு வைத்துள்ளனர்.

 

முதலில், ஒரு நாளைக்கு வாடிக்கையாளர்கள் 25,000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 18 ஆம் தேதியான இன்று, வாடிக்கையாளர் வங்கிக்கு சென்றபோது நடப்புக் கணக்குகள் மொத்தமாக முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளான  NEFT, RTGS ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு, தவறாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

ஜி.எஸ்.டி, வரி விஷயத்தில் மத்திய பா.ஜ.க அரசின் தவறான நடைமுறையால், கரூரில் உள்நாட்டு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, மூடப்பட்டு வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் முக்கிய வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியில், நடப்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள தொழில்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

 

ஏற்கனவே, வங்கித் துறையின் மீது பா.ஜ.க மோடி அரசு ஏற்படுத்தியுள்ள அழுத்தம் காரணமாக, நான்கு வங்கிகள் மோசமான நிலையை அடைந்துள்ளன. அதேபோல், மிகவும் மோசமடைந்துள்ள தொழில்துறை மேலும் ஒரு பிரச்சனையை இப்போது எதிர்கொண்டுள்ளது. வங்கிகள் மூலமே தொழில்துறையினர் வரவு செலவு செய்வதாலும், பொருளாதார மந்தநிலை காரணமாகவும், யாரிடமும் ஒரு மாதத்திற்குத் தேவையான கையிருப்பு இல்லை. ஆகவே இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாக மத்திய அரசும், நிதி அமைச்சகமும் விரைவாகத் தலையிட்டு தீர்வு காண்வேன்டும்" என்றார்.


 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

நாமக்கல் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
CM MK Stalin fulfilled the demand of the people of Namakkal 

நாமக்கல் மாவட்டம் கடந்த 1997 ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகையின் எண்ணிக்கை 17 லட்சத்து 26 ஆயிரத்து 601 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில், நாமக்கல் மாவட்டம், கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள் என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 98.70 கோடி ரூபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 55.15 கோடி ரூபாய் பங்குத்தொகையுடன் இவ்வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், 2020-21 ஆம் ஆண்டில் 22.17 கோடி ரூபாய், 2021-22 ஆம் ஆண்டில் 20.37 கோடி ரூபாய் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 18.24 கோடி ரூபாய் என தொடர்ந்து லாபம் ஈட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட முதலமைச்சர் ஆணையிட்டார். இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி இன்று (6.3.2024) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.