Skip to main content

''எனக்கு இதில் சின்ன ஆதங்கம் இருக்கிறது''-தமிழிசை வேண்டுகோள்!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

 "I have a little apprehension about it" - Tamilisai anguish

 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் செஸ் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்த ஃபீவர் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

 

 இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ''அந்த காலத்தில் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுதான் செஸ்ஸில் ஒரு பிரமாண்ட மனிதராக வந்திருந்தார். அவரின் வழியை பின்பற்றி பிரக்ஞானந்தா என்ற தம்பி உலக அளவில் வெற்றிகளை குவித்து வருகிறார். அவர் மட்டுமல்ல இன்னும் நிறைய பேருடைய பெயர்களை சொல்லலாம். சின்ன சின்ன குழந்தைகள் கூட செஸ் விளையாட்டை அழகாக விளையாடுகிறார்கள். இதனை பிரதமர் துவக்கி வைப்பது மிக மகிழ்ச்சி. எனக்கு ஒரு சின்ன ஆதங்கம் இருக்கிறது.  இது ஒரு தேசிய விழா. இதனை நடத்த தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி, 186 நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் வருகிறார்கள். ஆனால் சென்னை வழியாக விமான நிலையத்திலிருந்து இறங்கி வரும் பொழுது பார்த்தேன். பல இடங்களில் விளம்பரங்களில் பிரதமரின் படம் இல்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனிக்க வேண்டும். இது இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதோடு தமிழ்நாட்டுக்கும், பிற மாநிலங்களுக்கும் பெருமை சேர்க்கும் என்பதால் அழைப்பிதழில் உள்ளது போன்று எல்லா இடங்களிலும் பிரதமரின் படம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இது தேசிய பெருமை வாய்ந்த நிகழ்வு. இது எனது ஆதங்கம். இதனை எனது வேண்டுகோளாக வைக்கிறேன்'' என்றார்.

 

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமரின் படம் இல்லாததால் அதிருப்தி அடைந்த பாஜகவினர் பல இடங்களில் செஸ்  ஒலிம்பியாட் போட்டி விளம்பரப் பலகைகளில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் படத்தை ஒட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்