Skip to main content

''உங்களால் மெய் சிலிர்க்கிறேன் ரத்னா'' - பெண் கவுன்சிலரை பாராட்டிய கனிமொழி எம்.பி

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

சென்னையில் இரவு பகல் பாராமல் மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் கவுன்சிலரை பாராட்டியிருக்கிறார் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. அந்தப் பெண் கவுன்சிலருக்கு அவர் சார்ந்த வார்டு மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தபடி இருக்கிறார்கள்.

 

சென்னையில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. திமுக அரசும் சென்னை மாநகராட்சியும் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. பெய்து கொண்டிருக்கும் மழை அரை மணி நேரம் நின்றாலும் போதும், சாலைகளில் இருந்த தண்ணீர் வழிந்து ஓடியது. இதனால் மக்களின் அவஸ்தைகள் பெருமளவு  குறைந்திருந்தது. அதேசமயம், மிகவும் தாழ்வான பகுதிகள், மெட்ரோ பணிகள் நடந்து வரும் பகுதிகள், வட சென்னை ஏரியாக்கள் எனக் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வெள்ளம்போல் காட்சி தந்தது சென்னை.

 

அந்த வெள்ளத்தையும் பம்ப் செட்டுகள் மூலம் அகற்ற தீவிரப் பணியில் ஈடுபட்டிருந்தனர் மாநகராட்சி ஊழியர்கள். இருப்பினும் சில பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகளோ, ஊழியர்களோ எட்டி கூடப் பார்க்கவில்லை. சென்னை விருகம்பாக்கம் 128-வது வார்டு பகுதிகள் இந்த மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏரியா மக்கள் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஏரியா வாசிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தபடி இருந்தனர். ஆனாலும் யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

 

இந்நிலையில், ஏரியா திமுக பெண் கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரனிடம் முறையிட்டனர். தகவல் கிடைத்ததுமே திமுகவினரை அழைத்துக்கொண்டு ஏரியாவுக்குள் சென்றார். மழை வெள்ளத்தால் அவதிப்பட்ட மக்களைச் சந்தித்து,  “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். தேங்கிய தண்ணீரை அகற்றிவிடுகிறோம்'' என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு, விடிய விடிய அந்தப் பகுதிகளிலேயே இருந்து தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டார் கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரன். மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

கவுன்சிலர் ரத்னாவின் பணிகளைக் கண்டு ஏரியா பெண்மணிகள் பலரும் சோசியல் மீடியாக்களில் இதனைப் பதிவு செய்துள்ளனர். பாராட்டுகளும் வாழ்த்துகளும் ரத்னாவுக்கு தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் இது வைரல் ஆக, இதனையறிந்த திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., “பெருமையாக இருக்கிறது ரத்னா” என்று ஆங்கிலத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் ரத்னாவை தொடர்பு கொண்டு, “உங்களின் மக்கள் பணி அறிந்து மெய்சிலிர்க்கிறேன். நெருக்கடியான சூழலில் மக்களுக்காகக் களத்தில் இறங்கிச் செய்யும்  சேவைதான் உன்னதமானது. வாழ்த்துகள்’’ என்று பாராட்டியிருக்கிறார் கனிமொழி எம்.பி.

 

 

சார்ந்த செய்திகள்