எதிர்ப்பாராத விதமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நேற்று (30/12/2021) மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று (30/12/2021) மாலை அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப இருசக்கர, கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்த தொழிலாளர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
சென்னையில் முக்கிய சாலைகளில் நேற்று (30/12/2021) இரவு போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்திருந்தது. இதனால் பொதுமக்கள் மெட்ரோ நிலையங்களில் படையெடுக்கத் தொடங்கியதால், மெட்ரோ ரயில் சேவைகளின் நேரத்தை நீட்டித்திருந்தது மெட்ரோ ரயில் நிர்வாகம்.
இந்த நிலையில், சுரங்கப்பாதைகள், குடியிருப்புகள், சாலைகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (31/12/2021) ஒருநாள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.