Skip to main content

சில மொழிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது! – ஆலோசனை வழங்கிய உயர் நீதிமன்றம்!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020

 

highcourt chennai

 

அரசியல் சாசனத்தில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் மொழியை இருட்டடிப்பு செய்வதாகவோ, குறிப்பிட்ட சில மொழிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவோ மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம், மத்திய – மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

புதுச்சேரியில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த கலைலிங்கம் என்பவரின் ஜாமீன் மனுவை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் நீதிபதி கிருபாகரன், ‘தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி என்ற கோஷங்களுடன் சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற முகமூடியை அணிந்திருக்கின்றன. தமிழ்நாடு விடுதலை, தமிழ்மொழி முழக்கங்களை எழுப்பி, சில அரசியல் கட்சிகளும் மாநிலத்தில் அசாதாரண நிலையை ஏற்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இதுபோன்ற குழுக்கள் நாட்டின் ஜனநாயகத்திற்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.  தமிழகத்தில்,  1967 -ஆம் ஆண்டுக்குப் பின், காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிக்கு தமிழ் மொழியே காரணம். மொழி என்று வரும் போது,  பல மாநிலங்கள் அதைத் தீவிரமாகக் கருதுவதால், அரசியல் சாசனம் 22 மொழிகளை அங்கீகரித்துள்ள நிலையில், தங்கள் மொழி இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும், குறிப்பிட்ட சில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது.

மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி கிருபாகரன், மொழிப் பேரின வாதத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதுபோன்ற சக்திகள் தலையெடுக்க அனுமதிக்கவும் கூடாது.’ என வலியுறுத்தினார்.

 

Ad

 

ஜாமீன் தள்ளுபடியில், நீதிபதி கிருபாகரன் உத்தரவில் சம்மதம் தெரிவித்துள்ள நீதிபதி ஹேமலதா, தமிழ் அமைப்புகள் மற்றும் மொழி தொடர்பான கருத்துகள் இந்த வழக்கில் தொடர்பில்லாதது என்பதால் அவற்றுடன் ஒத்துப்போகவில்லை எனத் தெரிவித்து வேறுபட்டுள்ளார். மேலும், மொழியைப் படிக்க வேண்டும் என்பது தனி நபர்களின் விருப்பம் என நீதிபதி ஹேமலதா தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்