Skip to main content

தமிழ்நாட்டில் மின்வெட்டை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Govt should take action to avoid power cuts in Tamil Nadu says  Ramadoss

4000 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளதால் தமிழ்நாட்டில் மின்வெட்டை தவிர்க்கம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் அதிக அளவாக 4000 மெகாவாட் வரை மின்சாரப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தென்மண்டல மின்பளு வழங்கும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க மின்னுற்பத்தித் திறனை அதிகரித்தல், மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து வாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மின் உற்பத்தி மற்றும் மின்தேவை குறித்த அறிக்கையை தென்மண்டல மின்பளு வழங்கும் மையம் வெளியிட்டிருக்கிறது. நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏப்ரல் மாதத்தில் பகல் நேர மின்தேவை 20,900 மெகாவாட் அளவுக்கும், இரவு நேரத்தில் 19,900 மெகாவாட் அளவுக்கும் அதிகரிக்கும். பகல் நேரத்தில் சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கும் என்பதால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மத்திய தொகுப்பிலிருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கப்படும் மின்சாரம் ஆகியவற்றைக் கொண்டு தேவையை சமாளித்து விடும். ஆனால், இரவு நேரத்தில் சூரிய மின்சாரம் கிடைக்காது என்பதால், அனைத்து ஆதாரங்களில் இருந்தும் 17,917 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இரவு நேரங்களில் 1983 மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது.

சென்னை எண்ணூரில் அமைக்கப்பட்டு வரும் 800 மெகாவாட் திறன்கொண்ட வடசென்னை அனல் மின்நிலையத்தின் (மூன்றாம் நிலை) பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த சில வாரங்களில் மின்னுற்பத்தி தொடங்கப்படவேண்டும். அத்துடன் தனியாரிடம் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி முழுமையாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டால், சராசரியாக 1000 மெகாவாட் அளவுக்கும், அதிகபட்சமாக 2800 மெகாவாட் அளவுக்கும் பற்றாக்குறை ஏற்படும். ஒருவேளை வடசென்னை அனல் மின்நிலையம் பயன்பாட்டுக்கு வராமல், மின்சார கொள்முதலும் முழுமையாக செய்யப்படாத நிலையில், சராசரியாக  3800 மெகாவாட் முதல் 4000 மெகாவாட் வரை மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.

சூரிய ஒளி மின்சாரத்தின் உதவியுடன் பகல் நேரத்தில் பெரிய அளவில் மின்வெட்டு இல்லாமலோ, குறைந்த அளவு மின்வெட்டுடனோ தமிழ்நாடு தப்பிவிடக்கூடும். ஆனால், இரவு நேரங்களில் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் கோடை வெயில் முன்கூட்டியே சுட்டெரிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இரவு நேரத்தில் இந்த அளவு அதிக மின்வெட்டை தமிழ்நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஏற்படவுள்ள மின்வெட்டை சமாளிக்க இப்போதிலிருந்தே உரிய திட்டமிடலும், செயலாக்கமும் செய்யப்பட வேண்டும். கோடைக்காலத்தில் அனைத்து மாநிலங்களுக்குமே  கூடுதல் மின்சாரம் தேவைப்படும் என்பதால், சந்தையில் மின்சாரம் வாங்குவது மிகவும் கடினமானதாக இருக்கும். அதனால், தமிழகத்திற்கு தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வாங்குவதற்காக தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுடன் இப்போதே மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் மின்தேவை இந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதையோ, மின்சார பற்றாக்குறை ஏற்படும் என்பதையோ ஒப்புக்கொள்வதற்கே மின்வாரிய அதிகாரிகள் தயாராக இல்லை.

தமிழ்நாட்டின் மின்தேவை ஆண்டுக்கு 10% அதிகரிக்கும் என்ற யூகத்தின்படி தான் தென்மண்டல மின்பளு வழங்கும் மையம் இந்த அறிக்கையை தயாரித்திருப்பதாகவும், மின்தேவை இந்த அளவுக்கு அதிகரிக்காது என்பதால் நிலைமையை சமாளித்து விடலாம் என்றும் மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த அலட்சியப் போக்கு தான் தமிழகத்தை இருளில் ஆழ்த்தப் போகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. தமிழ்நாட்டில்  புதிய தொழிற்சாலைகள் அதிக அளவில் தொடங்கப்பட்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறி வரும் நிலையில், மின்தேவை அதிகரிக்காது என்று எந்த அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர் என்பது தெரியவில்லை. அலட்சியப் போக்கை கைவிட்டு,   மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பது தான் மின்சார வாரியத்தின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மின்வெட்டு ஆபத்து இந்த அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு மின்னுற்பத்தி திட்டங்கள்  போதிய அளவில் செயல்படுத்தப்படாதது தான் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்கள் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகளாக  கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த 2014&ஆம் ஆண்டுக்குப் பிறகு 5,700 மெகாவாட் மின்திட்டங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. இத்திட்டங்கள் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், இவற்றிலிருந்து இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யபடவில்லை. தமிழ்நாட்டில்  17,970 மெகாவாட் அனல் மின்திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

கோடைக்காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்கும் மிகப்பெரிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.  எனவே, 800 மெகாவாட் திறன்கொண்ட வடசென்னை அனல் மின்நிலையத்தில் (மூன்றாம் நிலை) மின்னுற்பத்தியை தொடங்குதல், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்தல் ஆகிவற்றின் மூலம் மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவையும் தற்காலிகத் தீர்வுகள் தான். கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட அனல் மின்திட்டங்களை மட்டுமே நிறைவேற்றுதல், 2030&ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டங்கள், 15,000 மெகாவாட் நீரேற்று மின்திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் மின்வெட்டை நிரந்தரமாக தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.