மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் இன்று 'தூய்மை இந்தியா' திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி (அ.தி.மு.க) சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசும்போது "நூறு சதவீதம் கழிவறை கட்டப்பட்ட மாநிலமாக விளம்பரம் செய்கிறீர்கள். எங்கே கட்டப்பட்டுள்ளது. என்னுடையே தொகுதியிலேயே கட்டப்படவில்லை" என ஆளும் கட்சியையும், தூய்மை இந்தியா திட்டம் பற்றியும் குறைகூறி பேசிக்கொண்டிருந்தார்.
அதனால் அதிருப்தியடைந்த துணைநிலைஆளுநர் கிரண்பேடி மைக்கை நிறுத்த உத்தரவிட மைக் துண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அன்பழகன் கிரண்பேடியிடம், 'நான் பேசிக்கொண்டிருக்கும் போது மைக்கை எப்படி நிறுத்தலாம்' என வாக்குவாதம் செய்தார். அதனால் மேலும் கடுப்பான கிரண்பேடி 'பிளீஸ் கோ... பிளீஸ் கோ... என போகச் சொல்ல, அன்பழகனும் பதிலுக்கு கிரண்பேடியிடம், 'யூ பிளிஸ் கோ...' என்றார். மேலும் அன்பழகன், 'சட்டமன்ற உறுப்பினரை அழைத்து அசிங்கப்படுத்துகிறீர்களா....?' என மேடையிலிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்ய எம்.பி ராதாகிருஷ்ணன் சமாதானம் செய்தார். ஆனால் அதை அன்பழகன் கேட்காமல் மேடையிலேயே கீழே அமர செல்கிறார். அப்போது உள்ளாட்சி தூறை அமைச்சர் நமச்சிவாயம் அன்பழகனின் கையை பிடித்து சமரசம் செய்ய முயற்சிக்க நமச்சிவாயத்தின் கையை வேகமாக தட்டிவிட்ட அன்பழகன் கோபமாக, வேகமாக, ஆவேசமாக பேசியவாறே மேடையிலிருந்து இறங்கி செல்கிறார்.
மாநிலத்தின் முதன்மை பிரதிநிதிகள் பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் ஆளுநருக்கும், எம்.எல்.ஏக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நடந்த மேடை மோதல் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.