Skip to main content

அனுமதியின்றி கற்கள் வெட்டி கடத்தல்; தடுக்கச்சென்ற அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
government employee had injured in salem police investigation

இடைப்பாடி அருகே, அரசின் அனுமதியின்றி தனியார் பட்டா நிலத்தில் கற்களை வெட்டிக் கடத்த முயன்ற கும்பலை தடுக்கச் சென்றபோது, வருவாய்த்துறை அலுவலர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் சமுத்திரம் பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல் கற்கள் வெட்டி டிராக்டர் மூலம் கடத்தப்படுவதாக இடைப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில், சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) குமார், தாதாபுரம் விஏஓ சுரேஷ் ஆகியோர் நிகழ்விடம் விரைந்தனர். அங்கு கற்கள் வெட்டிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், விஏஓக்கள் இருவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டினர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த கற்கள் கடத்தும் கும்பல், அலுவலர்களை சரமாரியாக தாக்கினர். மீண்டும் இந்தப் பக்கம் வந்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என்றும் மிரட்டினர். 

இதற்கிடையே, சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் நிகழ்விடத்திற்கு ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்ததும், கற்களை வெட்டி கடத்தும் கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பலத்த காயம் அடைந்த விஏஓக்கள் இருவரையும் பொதுமக்கள் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து விஏஓ குமார், கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், சமுத்திரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், மணிகண்டன், செந்தில் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து குமாரை தாக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
young man who married the girl

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற முகமது ஆதம். இவர் சிறுமியை திருமணம் செய்ததாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முகமது ஆதம் 17 வயது  சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தச் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் முகமது ஆதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்; தீயாகப் பரவிவரும் வீடியோ!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
 youths are intoxicated with cannabis in Palani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சில இளைஞர்கள் போதையில் மிதப்பது போல் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை பயன்படுத்தி அதன் மூலம் போதை ஏறி பூங்காவில் விழுந்து கிடப்பது போல  வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்துவது மற்றும் பொது இடத்தில் விழுந்து கிடப்பது போன்று வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.  அதைத் தொடர்ந்து பழனி நகர டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் போலீசார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர்களைத் தேடி வருகின்றனர். ஏற்கெனவே பழனி  நகரில் உள்ள அடிவாரம், பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன் உள்பட சில இடங்களிலும் அதுபோல் பழனியைச் சுற்றியுள்ள பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரபட்டி உள்பட சில இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.  

 youths are intoxicated with cannabis in Palani

இது சம்மந்தமாக பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, “அந்த  வீடியோ குறித்து விசாரணை செய்து, அந்த இளைஞர்களைத் தேடி வருகிறோம். கூடிய விரைவில் கைது செய்வோம். இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று பேரை ஏற்கனவே கைது செய்து இருக்கிறேன். மேலும் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவலும் வந்திருப்பதால் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து  சமூக விரோத செயலில் ஈடுபடும் அந்தக் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இருப்பினும், பழனியில் இதுபோன்ற வீடியோ எடுத்து இளைஞர்கள் இணையத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி, கொடைக்கானலில் பெண்களை வைத்து பணம் பறிக்கும் கும்பலை கையும் களவுமாக பிடிக்க எஸ்பி பிரதீப் அதிரடி நடவடிக்கை  எடுத்திருந்தார். அதுபோல் தற்போது பழனி மட்டுமல்ல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  பல பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இது சம்மந்தமாக பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரும் மாவட்ட எஸ்.பி.பிரதீப்பிடம் தொடர்பு கொண்டு பழனி உட்பட சில இடங்களில் கஞ்சா  விற்கப்படுவதாக தகவல் வருவதால் அதை ஒடுக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.