
அண்ணா திமுக என்ற அண்ணா பெயரை சொல்ல யோக்கியதை இல்லாத அரசு அண்ணா பெயரையோ, படத்தினையோ, கட்சி கொடியில் கருப்பு, சிவப்பு நிறத்தையோ பயன்படுத்த தகுதியில்லாத அரசு என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவில்பட்டியில் ம.தி.மு.க கட்சி நிர்வாகி ஒருவர் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"தமிழகத்தில் மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் உள்ளது. தமிழகத்தில் மதசார்பின்மையை சிதைக்கும் வகையிலும், சீர்குலைக்கும் வகையிலும் சதி நோக்கத்தோடு, ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில், வடநாட்டில் தொடங்கி இங்கு வந்துள்ளனர். இதற்கு முழுபாதுகாப்பு தமிழக அரசு கொடுக்கிறது.
அண்ணா திமுக என்ற அண்ணா பெயரை சொல்ல யோக்கியதை இல்லாத அரசு அண்ணா பெயரையோ, படத்தினையோ, கட்சியில் கருப்பு, சிவப்பு கலரை பயன்படுத்த தகுதியில்லாத அரசு. பெரியார் சிலையை உடைப்போம் என்று அராஜக பேர்வழியயை கைது செய்யமால், ஜனநாயக முறையில் கருப்புக்கொடி காட்ட சென்றவர்களை கைது செய்வது என்ன நியாயம்..?
போராட்டக்களத்திற்கு வருவதற்கு முன்பே திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்ததது என்ன நியாயம்,.? மதுரையில் கிறிஸ்துவர்கள் ஜெபவீடு தாக்கப்படுகிறது, பெண் தாக்கப்படுகிறார். பைபிள் எரிக்கப்படுகிறது. குற்றவாளியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, காவல்துறைக்கு கடும் கண்டனத்தினை தெரிவிக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதையெல்லாம் அனுமதித்து இருக்க மாட்டார். இரும்புக்கரம் கொண்டு தடுத்து இருப்பார்." என்றார் அவர்.