Skip to main content

சேலத்தில் போலி நெய் தயாரிப்பு கிடங்குக்கு 'சீல்'!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
g

 

சேலத்தில் போலி நெய் தயாரிப்பு கிடங்குக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று  (செப். 27, 2018) மாலை அதிரடியாக 'சீல்' வைத்தனர்.


சேலம் 2 புதுத்தெருவில் ஒருவர் போலியாக நெய் தயாரித்து, சுற்றுவட்டார கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து உணவுப்பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையில் கள அலுவலர்கள், சம்பந்தப்பட்ட கிடங்கில் மாலை 6.30 மணியளவில் திடீர் சோதனை நடத்த

அங்கே போலி நெய் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்த ஓர் இளைஞர் ஈடுபட்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அம்மாபேட்டை பாலாஜி நகரை சேர்ந்த இஸ்மாயில் (37) என்பது தெரிய வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக புதுத்தெருவில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு போலியாக நெய் தயாரிப்பில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.

 

gh


வனஸ்பதி (டால்டா) மற்றும் பாமாயில் ஆகியவற்றை கலந்து போலி நெய் தயாரித்து வந்துள்ளார். நெய் வாசனைக்காக செயற்கை எசன்ஸ் மற்றும் செயற்கை நிறமூட்டிகளையும் பயன்படுத்தி வந்துள்ளார். தீபம் ஏற்றுவதற்கான நெய் என்ற பெயரில், 50 மி.லி. கொள்ளளவு கொண்ட சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து, அவற்றை பத்து ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்துள்ளார். 


சேலம் மாநகரம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளுக்கு போலி நெய்யை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நெய் (?) பாக்கெட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் மளிகை கடைக்காரர்களுக்கு 100 சதவீதம் வரை லாபம் கிடைப்பதால் அதிகாரப்பூர்வ பிராண்டு பெயர்களில் விற்கும் நெய்யைவிட, இஸ்மாயில் தயாரித்து அனுப்பும் போலி நெய்க்கு அதிகளவில் ஆர்டர்கள் கொடுத்து வந்துள்ளனர்.


ஸ்டார் (ராசிபுரம்), கிருஷ்ணா (ஊத்துக்குளி), ருச்சி (காங்கேயம்) ஆகிய ஊர்களில் பிரசித்தி பெற்ற பிராண்டுகளின் பெயர்களை அச்சிட்ட பாக்கெட்டுகளில் அடைத்து போலி நெய்யை சந்தைப்படுத்தி வந்துள்ளார் இஸ்மாயில். வாசனைக்காக தடை செய்யப்பட்ட புரப்பலைன் கிளைக்கால் வேதிப்பொருளை கலந்துள்ளார். 


போலி நெய் மற்றும் அவற்றுக்கான மூலப்பொருள்கள் ஆகியவற்றின் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்காக சேகரித்தனர். அங்கிருந்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 75 கிலோ போலி நெய் மற்றும் வெற்று பாக்கெட் உறைகள், 135க்கும் மேற்பட்ட தகர டின்களை பறிமுதல் செய்தனர். மேலும், அந்தக் கிடங்கை பூட்டி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.  


உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் தொடர் நடவடிக்கைகளால் சேலத்தில் கள்ளச்சந்தையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள் விற்பனையாளர்கள், கலப்பட உணவுத் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்