சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் டீன் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சேலம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தினமும் 6000க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஓ.பி. பிரிவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இதனால் மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் போன்றவற்றுக்கான தேவை மற்ற மருத்துவமனைகளைக் காட்டிலும் இங்கு கூடுதலாக தேவைப்படும். இந்நிலையில், மருந்துகள் கொள்முதலில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக முன்னாள் டீன் உள்பட சிலர் மீது புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பிட்ட பட்ஜெட் வரம்புக்குள் அந்தந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகமே 'லோக்கல் பர்ச்சேஸ்' என்ற அடிப்படையில் நேரடியாக மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து கொள்ள முடியும். பெரிய பட்ஜெட் அளவிலான கொள்முதல் எனில், தமிழ்நாடு மருந்து கழகம் மூலமே கொள்முதல் செய்ய முடியும்.
இவ்வாறு லோக்கல் பர்ச்சேஸ் அடிப்படையில் நடந்த மருந்து கொள்முதலில்தான் லட்சக்கணக்கில் மோசடி நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
கடந்த 2013 - 2014ல் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்த கார்த்திகேயன், அப்போதைய நிர்வாக அலுவலர் இளங்கோவன், அப்போதைய அலுவலக கண்காணிப்பாளர் (கிடங்கு பிரிவு) தண்டபாணி, உதவியாளர் அசோக்ராஜ், தனியார் மருந்து நிறுவன உரிமையாளர் மீனாட்சி ஆகிய 5 பேர் மீதும் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், குற்றத்துக்கு உடந்தை என 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த தில்லுமுல்லுகள் இரண்டு விதங்களில் நடந்திருக்கின்றன. மருந்து கொள்முதல் செய்வதற்காக சில தனியார் மருந்து நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அந்த நிறுவனங்களிடம் இருந்து இரண்டு முதல் நான்கு மடங்கு வரை விலைகளை உயர்த்தி மருந்துகள் கொள்முதல் செய்து மோசடி செய்திருக்கிறார்கள். மேலும், பெயரளவுக்கு மட்டுமான சில 'லெட்டர் பேட்' நிறுவனங்களின் பெயர்களிலும் மருந்துகளை கொள்முதல் செய்ததாகவும் மோசடி செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இவ்வாறு முறைகேடு நடந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
ஏற்கனவே, கார்த்திகேயன் முதல்வராக இருந்தபோது இப்படியான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றன. அதன்பேரில், மருத்துவமனை வட்டாரத்தில் கார்த்திகேயன், அலுவலக கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தனியார் மருந்து நிறுவனங்கள் என 38 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர். இந்த நிலையில்தான், முன்பு கூறப்பட்ட அந்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
புகாரில் சிக்கியுள்ள நபர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இவர்களில் கார்த்திகேயன், இளங்கோவன் ஆகியோர் பணி ஓய்வு பெற்று விட்டனர். கிடங்குப்பிரிவு கண்காணிப்பாளர் தண்டபாணி மட்டும் தற்போது, சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் கண்காணிப்பாளராக டெபுடேஷனில் பணியாற்றி வருகிறார். அசோக்ராஜ் என்பவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.