புகைமாசு இல்லாமல் பசுமைத் தீபாவளியை கொண்டாடுவோம் என்று தங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பலன் தரும் பலாக்கன்றுகளை வழங்கி இருக்கிறது ஒரு தனியார் பள்ளி. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி, கீரமங்கலம் அருகில் உள்ள அலஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள குருகுலம் தனியார் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் புகை மாசில்லா தீபாவளியை கொண்டாட தங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக புகை மாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதுடன் பசுமையை போற்றும் விதமாக பலன் தரும் மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனையறிந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது பள்ளி நிர்வாகத்தையும், மாணவர்களையும் பாராட்டியதுடன் இதுபோல ஒவ்வொரு முக்கிய தினங்களிலும் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். அப்போது தான் புவி வெப்பத்தை குறைத்து பருவநிலை மாற்றங்களையும் தவிர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் இந்த ஆண்டு தீபாவளியையும் பசுமை தீபாவளியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு பலா மரக்கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி இறுதி நாளில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் புகையில்லா பசுமைத் தீபாவளியை கொண்டாடும் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார்.
பலா மரக்கன்றுகளை பெற்றுச்சென்ற குருகுலம் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று காலை முதல் தீபாவளி புத்தாடைகள் அணிந்து தங்கள் தோட்டங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமைத் தீபாவளியை கொண்டாடியுள்ளனர். இதேபோல தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் தலைவர்கள் பிறந்தநாள் நினைவுநாள் போன்ற தினங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் சிறப்பாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பள்ளி தாளாளர் சிவநேசன் கூறும் போது, ''மாணவர்களை பாடங்களை மட்டும் கற்றுக் கொள்வதைவிட அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக விடுமுறை நாட்களில் கீரை வளர்க்க வேண்டும் என்று கீரை விதை வழங்குகிறோம். அதேபோல தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மரக்கன்றுகள் வழங்குகிறோம். ஒவ்வொரு மாணவரும் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நட்டு படங்கள் அனுப்பும் போது மகிழ்ச்சியாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை எங்கள் மாணவர்கள் நட்டு வளர்த்துள்ளனர் என்பது ரொம்ப பெருமையாகவும் மகிழ்ச்சியாவும் உள்ளது. அமைச்சர் மெய்யநாதன் எங்கள் பள்ளிக்கே வந்து எங்கள் செயல்பாடுகளை பாராட்டியதுடன் எங்கள் பசுமை வழிகாட்டியாகவும் உள்ளார்'' என்றார்.