சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று (26/06/2021) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "சிஏஜி அறிக்கையில் மின்துறையில் ஊழல் எனக் கூறவில்லை; இழப்பு எனக் கூறப்பட்டுள்ளது. மின்சாரத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதைப் போல் பேசுகிறார்கள்; ஆனால் அப்படி எதுவும் இல்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. மின்துறை என்பது சேவைத்துறை லாபம் ஈட்டும் துறை அல்ல. தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவில்லை. மின்சாதனப் பொருட்களின் விலை ஏற்றம், ஊழியர்களின் வருமானம் அதிகரிப்பால் செலவும் அதிகரித்துள்ளது.
நிலக்கரி, ரயில் வாடகைப் போன்றவை உயர்ந்துவிட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதே எங்கள் ஆட்சியில் நோக்கமாக இருந்தது. தடையில்லா மின்சாரத்தைக் கொடுக்க நாங்கள் பாடுபட்டுள்ளோம். மின் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் பெரும்பாலும் தி.மு.க. ஆட்சியில் தான் போடப்பட்டது. எந்த ஆட்சி நடந்தாலும் தணிக்கைத்துறை இதுபோன்றக் கணக்குகளைத் தருவது வழக்கம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.