தூத்துக்குடியின் 3ம் மைல் சங்கர் காலனியைச் சேர்ந்த டேவிட் ஒர்க்க்ஷாப் ஒன்றில் வெல்டர் வேலையிலிருப்பவர். இவர் தன் மனைவி செல்வராணியுடன் வசித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டெபி. (28) இவருக்கு கிஷோர் என்பவருடன் திருமணமாகி கிறிஸ்டினா (5) கேத்தரின் (5) என்ற மகள்கள் உள்ளனர். சந்தேகம் காரணமாக முதல் கணவர் கிஷோர் பிரிந்து சென்று விட ஸ்டெபி தன் இரண்டு பிள்ளைகளுடன் தூத்துக்குடியின் மாப்பிள்ளையூரணியின் மேற்கு காமராஜ் நகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் டேவிட்டிற்கும் ஸ்டெபிக்கும் தொடர்பாகி பின்னர் டேவிட்டை 2வது திருமணம் செய்திருக்கிறார் ஸ்டெபி. அதன் பின் டேவிட் ஸ்டெபியுடன் மேற்கு காமராஜ் நகரிலும், முதல் மனைவி செல்வராணியுடன் சங்கர் காலனியிலுமாக மாறி மாறி குடும்பம் நடத்தியிருக்கிறார்.
இந்தச் சூழலில் ஸ்டெபி அடிக்கடி தன் செல்போனில் யாருடனோ அதிக நேரம் பேசி வந்திருக்கிறார். இதை டேவிட் கண்டிக்க அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. தன் இரண்டாவது மனைவி ஸ்டெபி மீது சந்தேகப்பட்டிருக்கிறார். நேற்று முன் தினம் இரவு டேவிட் வீட்டிற்கு வந்த போது, அது சமயமும் நீண்ட நேரம் செல்போனில் ஸ்டெபி பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரப்பட்ட டேவிட்டிற்கும் ஸ்டெபிக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரௌத்திரமான டேவிட் ஸ்டெபியையும், சிறுமி கிறிஸ்டினாவையும் தாக்க, இதில் ஸ்டெபி மயங்கி விழுந்திருக்கிறார்.
இதன் பிறகும் ஆத்திரம், வெறி தணியாத டேவிட் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கேத்தரினாவை தொட்டிலோடு சேர்ந்து சுவற்றிலடித்திருக்கிறார். இதில் குழந்தை மூர்ச்சையாக டேவிட் தப்பிச் சென்றிருக்கிறார். நேற்று காலை மயக்கம் தெளிந்த ஸ்டெபி, தொட்டிலிலுள்ள குழந்தையைப் பார்த்த போது குழந்தை மயங்கிக் கிடப்பது தெரியவர பதறிய ஸ்டெபி உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு குழந்தையைச் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த தாளமுத்து நகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியவர்கள் வழக்குப் பதிவு செய்து சங்கர் காலனியில் பதுங்கியிருந்த 2வது கணவர் டேவிட்டைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.யான பாலாஜி சரவணன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.