Skip to main content

முதியவருக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்! 

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

The fake doctor who treated the elderly; Police in serious investigation

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது விட்டலாபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்பவரது மகன் மணிகண்டன் (44), பி.எஸ்.சி படித்துள்ளார். இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தற்போது விட்டலாபுரம் சாலையில் உள்ள தனது சொந்த வீட்டிலேயே இவர் மருத்துவர் போன்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்துள்ளார்.

 

இந்த நிலையில், திண்டிவனம் அருகிலுள்ள கருணாவூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு (எ) ஆறுமுகம் (70) என்ற முதியவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது உறவினர்கள் போலி மருத்துவர் மணிகண்டனிடம் அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்துள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது முறையாக நேற்று (11.07.2021) மதியம் மணிகண்டனிடம் மருத்துவம் பார்த்துவிட்டு நடந்துசென்றுள்ளார் முதியவர் ஆறுமுகம். சிறிது தூரம் சென்றவுடன் சாலை ஓரத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தவர், அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலி மருத்துவர் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார். தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 

மேலும் விசாரணையில், போலி மருத்துவர் மணிகண்டன் தவறான சிகிச்சை அளித்ததால் ஆறுமுகம் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளதாக ஆறுமுகத்தின் உறவினர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து போலி மருத்துவர் மணிகண்டன் மருத்துவம் பார்த்த அறையைப் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர். இதுகுறித்த சுகாதாரத்துறையினரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து போலி மருத்துவர் மணிகண்டனை தேடிவருகின்றனர். மணிகண்டன் போலியாக மருத்துவம் பார்த்ததாக ஏற்கனவே இரண்டுமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உண்மையான மருத்துவர்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு சிகிச்சை அளித்தால் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகரிக்க மாட்டார்கள். போலி மருத்துவர்கள் அதிகரிப்பதற்கு காரணம், முறையாக மருத்துவம் படித்த மருத்துவர்கள்தான்; அவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்க தயங்குவதுதான். அரசு மருத்துவர்கள் கிராமப்புற சுகாதார நிலையங்களுக்குப் பணிமாறுதல் பெற்றுச் சென்றாலும், சென்ற சில மாதங்களிலேயே மீண்டும் நகரப் பகுதிகளுக்குப் பணிமாறுதல் பெற்று திரும்பிவிடுகிறார்கள். இப்படி அரசு மருத்துவர்கள் கிராமப்புற மக்களைப் புறக்கணிப்பதால்தான் போலி மருத்துவர்கள் அதிகரிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்