Skip to main content

‘சடங்குகள் இல்லாத இந்து திருமணம் செல்லாது’ - உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
Supreme Court sensational opinion on Hindu marriage without rituals is invalid'

உத்தரப்பிரேத்தைச் சேர்ந்த இளம் தம்பதியர் இருவர், இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணச் சான்றிதழில் பதிவு செய்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், இவர்களுக்கு மன கசப்பு ஏற்பட்டதால், தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், தங்களுடைய திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இளம் ஆண்களும் பெண்களும் "திருமணம் நடக்கும் முன்பே அதைப் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். திருமணம் என்பது பாடல் மற்றும் நடனத்துகான நிகழ்ச்சி அல்ல. உணவருந்துதல் அல்லது வரதட்சணை மற்றும் பரிசுகளைத் தேவையற்ற அழுத்தத்தின் மூலம் கோருவதற்கும், பரிமாற்றம் செய்வதற்கும் ஒரு சந்தர்ப்பம் அல்ல, அது குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். திருமணம் என்பது வணிக பரிவர்த்தனை அல்ல. இந்திய சமூகத்தின் அடிப்படை அழகு. எதிர்காலத்தில் வளரும் குடும்பத்திற்கு கணவன்-மனைவி என்ற அந்தஸ்தைப் பெறும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உறவை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படும் ஒரு புனிதமான அடித்தள நிகழ்வு.

இந்து திருமணமானது இனப்பெருக்கத்தை எளிதாக்குகிறது, குடும்பத்தின் அலகு ஒருங்கிணைக்கிறது மற்றும் பல்வேறு சமூகங்களுக்குள் சகோதரத்துவ உணர்வை உறுதிப்படுத்துகிறது. இந்து திருமணம் என்பது ஒரு சடங்கு. மேலும், அது புனிதமான தன்மையைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் மேலும் கவனிக்கிறோம். இந்து திருமணத்தில் சப்தபதியின் பின்னணியில், ரிக் வேதத்தின் படி, ஏழாவது படியை (சப்தபதி) முடித்த பிறகு, மணமகன் தனது மணமகளிடம், ‘நாம் நண்பர்களாகிவிட்டோம். உங்கள் நட்பிலிருந்து நான் பிரிய மாட்டேன்’ எனக் கூறுவான். இந்தச் சடங்குகளின்படி ஒரு இந்து திருமணம் செய்யப்படாவிட்டால், அதை இந்து திருமணமாக கருத முடியாது. 

Supreme Court sensational opinion on Hindu marriage without rituals is invalid'

1954ஆம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்டத்தின்படி, இந்துக்கள் மட்டுமல்லாமல் எந்த ஆணும், பெண்ணும் அவர்களின் இனம், ஜாதி அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல்,  கணவன்-மனைவி என்ற அந்தஸ்தைப் பெறலாம். ஆனால், 1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டத்தின்படி, பிரிவு 5 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்குவது மட்டுமல்லாமல், சட்டத்தின் பிரிவு 7 இன் படி தம்பதியர் திருமணத்தை நடத்த வேண்டும்.

இந்து திருமண சட்டத்தின் விதிகளின்படி சரியான திருமண விழா இல்லாத நிலையில், ஒருவரையொருவர் கணவன் மற்றும் மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முற்படும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் நடைமுறையை நாங்கள் நிராகரிக்கிறோம். எனவே, பிரிந்த தம்பதிகள் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் சடங்கு இல்லாத நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழை செல்லாது என்றும் அறிவிக்கிறோம். மேலும், அவர்களின் விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது’ எனக் கூறினர். 

சார்ந்த செய்திகள்