Skip to main content

கொடுமுடியில் ஜன்சதாப்தி ரயில் நின்று செல்ல கோரி திமுக எம்.பி மனு

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
DMK MP petition demanding Janshatabdi train stop at Kodumudi

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பக்தர்களின் வசதிக்காக ஜன்சதாப்தி ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் ஈரோடு எம்பி பிரகாஷ் நேரில் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவியிடம் ஈரோடு எம்பி பிரகாஷ் அளித்துள்ள மனுவில், “ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடுமுடியில் மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில்கள் உள்ளது. இந்த புனிதத் தலத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.தற்போது தெற்கு ரயில்வே சார்பில் கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையிலிருந்து கோவைக்கும் ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் கொடுமுடி வழியாகச் செல்கின்றன. கொடுமுடி ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற இடமாக உள்ளதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் ஜன்சதாப்தி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பக்தர்களுக்கு மட்டுமின்றி, கொடுமுடியில் உள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதே போல ஈரோடு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படுகின்றது. இந்த ரயில் அதிகாலை 3:40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றுவிடுகின்றது. அதிகாலை நேரத்திற்கு சென்றுவிடுவதால் பயணிகள் சென்னை சென்ட்ரலில் இருந்து வெளியே செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே ஈரோட்டில் இருந்து இரவு 10 மணிக்கு ரயில் புறப்பட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனுவை ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹாவிடமும் திமுக எம்.பி பிரகாஷ் அளித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடும்பம் நடத்திய பெண் பிரிந்து சென்றதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
tragic decision taken by  man because woman  away

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பொம்மன்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒருவருடத்துக்கு முன்னர், சேலம் மாவட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரைக் கூட்டி வந்து மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண் கடந்த 2-ஆம் தேதி சண்டையிட்டுக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மணிகண்டனின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

விடிய விடியச் சோதனை; ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
10.40 lakh unaccounted money seized in Erode Rural Development Office

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 4வது மாடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் பொறுப்பு பொறியாளராக கோவையை சேர்ந்த கோபி, உதவி செயற்பொறியாளராக மோகன்பாபுவும் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் சாலைப்பணிகள், கட்டுமான பணிகள் தொடர்பான திட்டமிடல், மற்றும் கட்டுமான பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவது உதவி செயற்பொறியாளரின் முக்கிய பணியாகும். 

இதே போல கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு தகுதி நிர்ணய அங்கீகாரம் வழங்குவதும் இவரது பணியாகும். இந்நிலையில், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்தாரர்களிடமிருந்து டெண்டர்கள் விடப்பட்ட பணிகளுக்கான கமிஷன் தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி ராஜேஸ் தலைமையில் போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த இந்தச் சோதனை இன்று அதிகாலை 4 மணியளவில் நிறைவடைந்தது.

சோதனையின் முடிவில் மோகன் பாபுவிடமிருந்து ரூ.58 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உதவி செயற்பொறியாளர் மோகன்பாபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் தங்கி உள்ள கோபிசெட்டிபாளையம் அறையிலும், கோயம்புத்தூரில் உள்ள இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.