Skip to main content

தேமுதிக தேய்ந்த பின்னணி!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

"அரசியலில் கொஞ்சம்  ‘முன்ன பின்ன’ இருக்கத்தான் செய்யும். ஆனால், பேச்சில் சுத்தம் இருக்கணும். அதெல்லாம் எங்க கேப்டனோட போச்சு. இப்ப கட்சியில அண்ணியார் எடுக்கிற முடிவால் ரொம்ப ரொம்ப  பாதிப்பு ஏற்பட்டிருக்கு.." என்று   நம்மிடம் ‘உச்’ கொட்டினார் விருதுநகரைச் சேர்ந்த ஒரு தேமுதிக நிர்வாகி. தான் சொல்வதில் நியாயம் இருப்பதாகக் கூறினார். 

 

dmdk Worst background



அவருடைய கணக்கு பிரகாரம் பார்ப்போமே!

2009-நாடாளுமன்ற தேர்தலில் தனித்து  நின்று 10 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது தேமுதிக.  தற்போது அதிமுக, புதிய தமிழகம், பாமக, பிஜேபி, சமத்துவ மக்கள் கட்சி என பெரிய படை பலத்தோடு, அதிமுக வாய்ஸில் சொல்வதென்றால் மெகா கூட்டணி அமைத்து நின்றது. ஆனால்,  2.19 சதவீத வாக்குகள் மட்டுமே தேமுதிக வேட்பாளருக்கு கிடைத்திருக்கிறது.

 

தே.மு.தி.க சந்தித்த 5-வது தேர்தல் களம் இது. 2005-ல் உதயமான தேமுதிக, முதன் முறையாக 2006-ல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் சுமார் 27,64,000 வாக்குகள் கிடைத்தன. இது மொத்த வாக்கில் 8.33 சதவிகிதம். 

 

dmdk Worst background



பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கூட்டணிகளையும் எதிர்த்து 39 தொகுதிகளில். தனித்து நின்றது தே.மு.தி.க.  பெரும்பாலான தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அந்தத் தேர்தலில் 30,73,479 ஓட்டுகள் வாங்கியது. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.1 சதவீதமாகும். 

 



மொத்தத்தில் அந்தத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது தேமுதிக.  கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர், சேலம், திருவள்ளூர், ஆரணி, தருமபுரி, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது கேப்டனின் தேமுதிக கட்சி. 

 



தேமுதிக பிரித்த வாக்குகளால்,  அதிமுக கூட்டணி 13 இடங்களிலும், திமுக கூட்டணி 11 தொகுதிகளிலும், பா.ஜ.க. பொன்.ராதாகிருஷ்ணனும் தோல்வியைத் தழுவினர். வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், ஏ.கே.மூர்த்தி, தங்கபாலு, தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான் போன்றோரை அப்போது நாடாளுமன்றத்திற்குச் செல்லவிடாமல் தடுத்ததில் தேமுதிகவின் பங்களிப்பு அதிகம். 

 

dmdk



விருதுநகரில் போட்டியிட்ட வைகோ வெறும் 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்  மாஃபா பாண்டியராஜன் 1,25,229 வாக்குகள் பெற்றார்.  மாஃபா பாண்டியராஜன் தற்போது அதிமுகவில் இருப்பதெல்லாம் தனிக்கதை. 

 



2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் 14 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. இதில் திருப்பூரில் 2-வது இடத்தையும், மற்ற தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது அந்தக் கட்சி. மொத்தம் 5.2 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது 2009-தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதிதான். 

 



தற்போது,  அதிமுக-பா.ஜ.க. கூட்டணியில் 4 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக,  நான்கிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. மொத்தம் உள்ள  4 தொகுதிகளிலும் சேர்த்து 9,29,590 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. இது பதிவான மொத்த வாக்கு சதவிகிதத்தில் 2.19 சதவீதம் ஆகும். ஆக,  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக,  தேமுதிகவின் வீழ்ச்சியானது,  10 ஆண்டுகளில் 10 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்திருக்கிறது.  இதைக் கணக்கிடும்போது,  2009 தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டதையும், தற்போது 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

dmdk Worst background



தேர்தலுக்கு முன்பாக,  அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவது வாடிக்கையானதுதான். ஏதாவது ஒரு அணியில் சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதும் இயல்பானதுதான். அந்த வகையில்,  தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு திமுக விரும்பியது. ஸ்டாலினும் விஜயகாந்த் வீட்டிற்குப் போய் நலம் விசாரிப்பது போல், சுதீஷை சந்தித்துப் பேசினார். 

 



அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "விஜயகாந்த் எனது நண்பர், அவரது உடல் நலம் குறித்து மட்டுமே விசாரிக்க வந்தேன்" என்று  தெரிவித்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் சேர முயற்சி செய்த பிரேமலதா, எங்கே அதிமுக தங்களைக் கூட்டணியில் சேர்க்க விடாமல் போய்விடுமோ என்ற பயத்தில், " ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பின்போது அரசியல் பேசப்பட்டது" என்றார் பட்டவர்த்தனமாக. 

 

dmdk Worst background

 

இதற்கிடையே, அதிமுக பிடி கொடுக்காமல் இருந்ததால், தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான அனகை முருகேசன் உள்ளிட்டோரை துரைமுருகன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் சுதீஷ். ஒருபக்கம் பா.ஜ.க. கூட்டணியுடன் பேச்சு. மறுபுறம் துரைமுருகன் வீட்டிற்கு ஆள் அனுப்பியது என டபுள் கேம் ஆடிய தேமுதிகவின் வண்டவளத்தை துரைமுருகன், தமக்கே உரிய பாணியில் ஊடகங்களிடம் போட்டு உடைத்தார். இந்தக் கோபத்தை ஊடகங்களிடம் காட்டினார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. அன்றைய பேட்டியின்போது "நீ, வா, போ, உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது..." என பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியது எல்லாம் ஊடகங்களிலும் வெளியானது. 

 

dmdk Worst background



பிரேமலதாவின் இந்த வரம்பு மீறிய பேச்சுக்கள்தான்,  தேமுதிகவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.  கள்ளக்குறிச்சி தேமுதிகவுக்கு செல்வாக்கான தொகுதி.  அங்கு 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுதீஷை திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி வென்றிருக்கிறார். அதேபோல், 2009-ல் விருதுநகரில் தனித்து நின்று ஒரு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பெற்ற தேமுதிகவால், தற்போது கூட்டணி பலத்தோடு நின்றும் வெற்றி பெறமுடியவில்லை. 

 

 



மொத்தத்தில்  அந்த நிர்வாகி கூறிய கணக்கு சரியாகவே இருக்கும் நிலையில், “வீழ்ச்சிக்குக் காரணம் -  தேமுதிக மீதும்,  அதன் கூட்டணி மீதும் மக்கள் வைத்திருக்கும் வெறுப்பு  அரசியலே! இதை பிரேமலதா.. ஸாரி..  அண்ணியார் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார், அவர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

'அவர் என் பிள்ளை இல்லை இனி உங்களின் பிள்ளை'- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'He is not my child not your child' - Premalatha Vijayakanth speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், '“விஜயபிரபாகரன் நினைத்திருந்தால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். அவர் இந்த மண்ணின் மைந்தன் என்பதால், நம் சொந்த பந்தங்கள் உள்ள இந்த பூமியில், இங்குள்ள மக்களுக்காக,  தன் தந்தையின் கனவைச் சுமந்து கொண்டு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.படித்தவர், பண்பாளர்,  இளைஞர், கருணை உள்ளம் கொண்டவர்,  மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற நல்ல சிந்தனையோடு வந்துள்ளார்.

விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை;  இனி அவர்  உங்கள் பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. இன்னும் கல்யாணம் கூட ஆகல. உக்களுக்காக உழைக்க வந்திருக்கிறார். உங்கள் தலைமையில் தான் அவரது திருமணத்தை நடத்துவேன்.  எனது மகன் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் இலவச தையல் பயிற்சி மையம் அமைத்து,   பயிற்சி நிறைவு பெற்றபின், அனைவருக்கும் தையல் மிஷின் வழங்குவோம். படிக்காத, படித்த இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையங்கள், தொகுதி முழுவதும் சொந்த செலவில் அமைப்போம். தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்படும். மற்ற வேட்பாளர்களைப் பற்றி நான் பேசமாட்டேன்.

மற்றவர்களைக் குறைசொல்லி அதில் ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நம் கட்சிக்கு இல்லை. நான் விருதுநகர் மக்களை நம்புகிறேன்.  நாங்கள் சென்னையில் இருப்பதாக நினைக்க வேண்டாம். இனிமேல்  விருதுநகரில் தான் இருப்போம். கேப்டனை நம்பியவர்கள் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. குடும்ப பாரம்பரிய சொந்த பந்தம், ரத்த பந்தம் இருக்கிறது விருதுநகர் தொகுதியில், விஜயபிரபாகரன் உண்மையாக உழைத்து, மாநில அளவில் முதன்மைத் தொகுதியாக கொண்டு வருவார். தமிழகம் முழுவதும் அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. நான் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடத்திலெல்லாம்,  விஜயபிரபாகரனுக்கு  பிரச்சாரம் செய்யவில்லையா என்று கேட்பார்கள்.  அவர் என் பிள்ளை இல்லை.   அங்குள்ள லட்சக்கணக்கான தாய்மார்களின் பிள்ளை.  அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சொன்னேன். உங்களை நம்பி நானும்,  கேப்டனும்,  விஜயபிரபாகரனை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். எல்லாம் மொழியும் அவருக்கு தெரியும்.  அமைதியாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம், அவர் பயங்கர ‘ஷார்ப்’,  அறிவாளி,  நிச்சயமாக உங்களுக்காக  உழைப்பார்”என்று பேசினார்.