Skip to main content

"அதிமுக அரசுக்கு அவப்பெயரே கிடைக்கும்" - டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

 

 dmdk vijayakanth statement about opening of liquor shops issue

 

தமிழக அரசு உத்தரவுப்படி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் இன்று டாஸ்மாக் கடைகள், பல நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. கரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், "தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மது நமக்குத் தேவைதானா? யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில் அரசு தாமாக முன்வந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதன் அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


மேலும் ஒவ்வொரு குடும்பத்தின் வருவாயை கருத்தில் கொள்ளாமல், அரசு தனது வருவாயை மட்டும் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளாய் திறந்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

மதுபிரியர்கள் குடும்பத்தில் கரோனா தொற்று அதிகரிக்கவும், குடும்ப வன்முறைகள் பெருகவும் டாஸ்மாக் கடைகள், காரணமாக அமைந்துவிடும். கடந்த 43 நாட்களாக ஊரடங்கை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பின் மூலம் அவப்பெயரே கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.