Skip to main content

கையும் களவுமாக பிடிபட்ட முன்னாள் ஆணையர்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Ex-Corporation Commissioner sentenced to three years imprisonment in bribery case

வேலூர் மாநகராட்சி ஆணையராக ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார். இவர் சிலமாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் துணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் சமயத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு குமார் வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்காக மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியையும் ஒப்பந்தம் எடுத்து செய்துள்ளார்.

இதற்காக ரூ. 10 லட்சத்து 23 ஆயிரம் காசோலையை மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது எனக்கு 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரம் தர வேண்டும் என்று ஆணையர் குமார் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஒப்பந்ததாரரை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தியதோடு பில் கிளியர் செய்வதை தாமதம் செய்துள்ளார். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான பாலாஜி ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார் என பாலாஜி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலாஜியிடம் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கொடுத்து கமிஷனர் குமாரிடம் வழங்கும்படி தந்தனர். ஒப்பந்ததாரர் பாலாஜி ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 29.04.2024 ஆம் தேதி இவ்வழக்கில் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்