Skip to main content

வளர்த்த ஜல்லிக்கட்டு காளையின் மறைவால் தவிக்கும் 90 வயது முதியவர்...!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி  இடமலையான். 90 வயது முதியவரான இவர் இருபது வருடங்களுக்கு முன்பு மாயாவு என்ற ஜல்லிக்கட்டு காளையை தனது சொந்தப் பிள்ளையை போன்று வளர்த்து வந்தார். அதுபோல் சுற்றுப் பகுதியில் நடக்கும் பல ஜல்லிக்கட்டு விழாக்களுக்கும் மாயாவுவை அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்கச் செய்தார். பார்ப்பதற்கு முரடன் தோற்றத்தில்  இருந்தாலும் மாயாவு இடமலையான் சொல்லுக்குக் கட்டுப்படும் சிறு குழந்தையாகவே இருந்துள்ளான்.

 

Dindigul incident-Jallikattu-old man

 



இதனால் மாயாவு மேல் அதிக பாசம் கொண்ட இட மலையான் மாயாவுவை விட்டு எங்கும் பிரிவதில்லை.  இந்நிலையில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு மாயாவு திடீரென இறந்து விடவே, இடமலையான் துடித்துப் போனார். மாயாவு காளையின் உடலை தனது சொந்த தோட்டத்தில் அடக்கம் செய்தார். அதன் பிறகு மாயாவுநினைவாக ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி தெய்வத்தை போல் வணங்கி வருகிறார். 

அது போல் இந்த ஆண்டு மாட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு இடமலையானும், அவரது மகன்கள் மற்றும் பேரப் பிள்ளைகள் அனைவரும் தோட்டத்தில் உள்ள மாயாவுக்கு அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.   மாயாவுவை பிரிந்த இடமலையான் அதற்கு பிறகு வேறு எந்த காளையையும் வளர்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 90 வயது முதியவரின் காளையின் மீது கொண்ட பாசம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்