Skip to main content

’இனிமேல் நீங்கள் வேலைவெட்டிக்கு போக தேவையில்லை; வீடுதேடி மாதம் ஆறாயிரம் உதவித்தொகை வரப்போகிறது’- ஐ.பெரியசாமி பேச்சு!

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

 

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திமுக வேட்பாளராக போட்டியிடும் வேலுச்சாமியை ஆதரித்து திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பெரியசாமி  தீவிரமாக ஆத்தூர் ஒன்றியத்தில் வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

 

p

 

பிள்ளையார்நத்தத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் வேட்பாளர் ப.வேலுச்சாமி மற்றும் தோழமைக்கட்சி நிர்வாகிகளுடன் பிள்ளையார்நத்தம், ஆலமரத்துப்பட்டி, என்.பஞ்சம்பட்டி, முன்னிலைக்கோட்டை, செட்டியபட்டி, காந்திகிராமம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் கலிக்கம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வந்த திமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் வேட்பாளர் ப.வேலுச்சாமிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பஞ்சம்பட்டி அருகே குளத்து வேலையில் ஈடுபட்டிருந்த 300க்கும் மேற்பட்ட மக்களிடம் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி வாக்கு சேகரித்தார்.

 

அதன்பின் பொதுமக்கள் மத்தியில் பேசிய ஐ.பெரியசாமியோ,  திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக விவசாயி வேலுச்சாமியை நிறுத்தியுள்ளோம். அவருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் 8 வருடங்களாகியும் ஆத்தூர் ஒன்றியத்திற்குள் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. கடந்த 2 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அதிகாரிகள் வச்சதுதான் சட்டமாகிவிட்டது. கிராம ஊராட்சிகளில் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது. 

 

p

 

வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் காட்டு தர்பாரால் கிராமங்கள் முழுவதிலும் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று கேட்டால் முறையான பதில் கிடையாது. இதற்கு காரணம் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறாததே என்றார். 

 

மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆட்சி அமையும் போது 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு தினசரி கூலியாக ரூ.300 கிடைக்கும். அதுபோல் அனைத்து மக்களுக்கும் வருடத்திற்கு 72ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க ராகுல் இருக்கிறார். அதன்மூலம் மாதந்தோறும் உங்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வீடுதேடி வந்துவிடும். இனிமேல் நீங்கள் வேலைவெட்டிக்கு கூட போக தேவையில்லை. அந்த அளவுக்கு மக்களுக்கு உதவி செய்ய பிரதமராக வரக்கூடிய ராகுல் தயாராக இருக்கிறார். 

 

ஆகவே, பொதுமக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் வேலுச்சாமியை அமோகமாக வெற்றிபெறச் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

தேர்தல் பிரச்சாரத்தில் தோழமை கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் மார்க்கிரேட்மேரி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சி.முரளிதரன், ஒன்றிய துணை செயலாளர் எம்.சி.பாண்டியன், பொருளாளர் கலிக்கம்பட்டி லெட்சுமணன் மற்றும் மாவட்ட பிரதிநிதி தங்கவேல், ஒன்றிய அவைத்தலைவர் வீரய்யா, பிள்ளையார்நத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் என்.எஸ்.நிக்சன்பால், புவனேஸ்வரி அருளரசன் மற்றும் கலிக்கம்பட்டி ஊராட்சி கழக செயலாளர் அருளரசன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்