Skip to main content

மகனின் கொடுமை தாங்காமல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய பெற்றோர்...!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Cuddalore parent son incident

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது பாண்டுரங்கன். இவரது மனைவி 70 வயது அஞ்சலை. இவர்களுக்கு அமிர்தலிங்கம் என்ற மகன் உள்ளார். அவருக்குத் திருமணமாகி மனைவி குழந்தைகள் என தனிக் குடும்பமாக வசித்து வருகின்றார். 

 

தாய் தந்தைக்கும் மகன் அமிர்தலிங்கத்திற்கும் இடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு, கடந்த 2006ஆம் ஆண்டு பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 'பெற்றோர்களுக்குத் தனக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை' என்று விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு குடும்பச் சொத்தில் இருந்து 1 லட்சத்தி 75 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 


ஆனால், அதன்பிறகும் அமிர்தலிங்கம் பெற்றோரை அடித்துத் துன்புறுத்தி மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டுரங்கன் அஞ்சலை தம்பதியினர் ஆவினங்குடி காவல் நிலையம், விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனப் பல்வேறு அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. 


இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாண்டுரங்கன் அஞ்சலை தம்பதியினரை அவரது மகன் அமிர்தலிங்கம் வீட்டை விட்டு அடித்துத் துரத்தி விட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேவந்து திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிழற்குடையில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று மாலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாண்டுரங்கன் அஞ்சலை இருவரும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்தத் தகவலை கேள்விப்பட்ட திட்டக்குடி வட்டாட்சியர் சையது அபுதாஹிர், அவர்கள் இருவரையும் நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு அவர் ஆவினங்குடி காவல் நிலையத்திற்குத் தொடர்புகொண்டு தம்பதியினர் பிரச்சனை குறித்து விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

 


 

சார்ந்த செய்திகள்