கடந்த மே ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன நற்குணம், கத்தாழை, மேல் வளையமாதேவி, எறும்பூர், நெல்லி கொல்லை,கீழ் வளையமாதேவி ஆகிய ஊராட்சிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மேற்படி ஆறு ஊராட்சி கிராம சபை கூட்டங்களிலும் கிராம மக்கள் தங்கள் ஊரில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த காரணத்தை முன்னிட்டு உயர் அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மேற்படி ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கற்றாழை ஊராட்சி செயலாளர் சிற்றரசு துரிஞ்சி கொல்லை ஊராட்சிக்கும், சின்ன நெற்குணம் ஊராட்சி செயலாளர் சசிகுமார் மேல் வளையமாதேவிக்கும், மேல் வளையமாதேவி ஊராட்சி செயலாளர் லீமா சின்ன நற்குணம் கிராமத்திற்கும், கீழ் வளையமாதேவி ஊராட்சி செயலாளர் லூர்து மேரி நெல்லி கொல்லை ஊராட்சிக்கும், அங்கு பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர் பாலமுருகன் கத்தாழைக்கும் எறும்பூர் ஊராட்சி செயலாளர் பாலகணபதி காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பணியிட மாற்றம் மாவட்ட மற்றும் மாநில அளவில் உள்ள ஊராட்சி செயலாளர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஊராட்சி செயலாளர்கள் கிராம சபை கூட்டங்களின் போது பெரும்பான்மை கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு தேவையான திட்டங்கள் தேவைகள் குறித்து மெஜாரிட்டி அடிப்படையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஊராட்சி பதிவேட்டில் பதிவு செய்வது ஊராட்சி செயலாளர்களின் பணி. இது எப்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மேற்படி ஆறு ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம் என்எல்சிக்கு எதிராக கிராம மக்கள் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கொண்டுவரப்பட்ட தீர்மானமே காரணம் என்கிறார்கள் கிராம மக்கள்.