Skip to main content

மனைவியின் விருப்பம்; புதுமையான முயற்சியில் இறங்கிய இன்ஜினியர்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

cuddalore marine engineer build ship house for wife

 

கடலூர் OT என்று அழைக்கப்படும் ஓல்டு நகர் (முது நகர்) பகுதி மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். அவரது மகன் சுபாஷ். இவர் மரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்துள்ளார். இதன் மூலம் சரக்கு கப்பலில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். சில மாதம் கப்பல் பணிப்பயணம், சில மாதம் விடுமுறை என குடும்பத்தினருடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சுருதி (வயது 11), கதிக்‌ஷா (வயது 8) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

 

சுபாஷ் மனைவி சுபஸ்ரீ, தன்னையும் குழந்தைகளையும் சுபாஷ் பணி செய்யும் கப்பலில் ஒரு முறை பயணம் செய்ய அழைத்துச் செல்லுமாறு விருப்பத்தை தெரிவித்துள்ளார். சரக்கு கப்பலில் பயணம் செய்வது உங்களுக்கு ஒத்து வராது. அந்தக் கப்பல் கம்பெனியும் இதற்கு அனுமதிக்காது எனவே கப்பலை போன்ற ஒரு வீடு கட்டித் தருகிறேன் என்று கூறியுள்ளார் கணவர் சுபாஷ். இதனை விளையாட்டாக கூறுவதாக சுபஸ்ரீ அப்போது எண்ணி உள்ளார். ஆனால் சுபாஷ் மனைவியிடம் சொன்னதை செய்து காட்டியுள்ளார்.

 

தனது மனைவி பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற, கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 11 ஆயிரம் சதுர அடி வீட்டுமனையை வாங்கிய சுபாஷ், அதில் 4000 சதுர அடியில் மனைவி பிள்ளைகள் கனவை நிறைவேற்றும் வகையில் 2022 ஆம் ஆண்டு கப்பல் போன்ற வடிவமைப்பில் ஒரு வீட்டைக் கட்டினார். கப்பலில் ஏறுவதைப் போன்று படிக்கட்டு அதில் ஏறி வீட்டுக்குள் செல்ல வேண்டும். கப்பலில் இருப்பதை போல் தரைதளம். அதன்மேல் இரண்டாம் தளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆறு அறைகள். அதில் உடற்பயிற்சி செய்யும் அறை, நீச்சல் குளம் ஆகியவற்றையும் அந்த வீட்டுக்குள் அமைத்துள்ளார்.

 

கப்பலின் அமைப்பு எப்படி இருக்குமோ அதே போன்று உள்ளேயும் வெளியேயும் அமைக்கப்பட்டுள்ளது. மிக அருமையான வடிவமைப்பில் இந்த கப்பல் வீடு கட்டப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதக்கும் கப்பலை போல இந்த வீடும் தண்ணீரில் மிதப்பது போல் வண்ண விளக்கு அலங்காரத்துடன் இரவு நேரங்களில் தோற்றமளிக்கிறது. அதற்கான வண்ணம் பூசப்பட்டுள்ளது. பார்ப்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விழிகளை விரிய வைக்கிறது. தண்ணீரில் மிதந்து செல்லும் கப்பல் தரையில் மிதந்து வருவது போல் வடிவமைத்துள்ளார் சுபாஷ்.

 

cuddalore marine engineer build ship house for wife

இந்த பிரமாண்ட கப்பல் வீட்டுக்கு கடந்த இரண்டாம் தேதி புதுமனை புகுவிழா நடத்தி குடியேறி உள்ளனர் சுபாஷ் குடும்பத்தினர். இந்த கப்பல் வீடு புதுமையான வகையில் கட்டப்பட்டுள்ளது பற்றிய தகவல் பரவி பொதுமக்கள் இந்த வீட்டைப் பார்ப்பதற்கு படையெடுத்து வருகிறார்கள். காதல் மனைவி மும்தாஜ்காக ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். அதேபோல் தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற கப்பல் வீடு கட்டி உள்ள சுபாஷிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.