Skip to main content

ஊரடங்கை மீறி விளையாடினால் இளைஞர்களின் எதிர்காலம் சிக்கலாகும் -மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! 

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் விருதாச்சலம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மங்கலம்பேட்டை, கங்கைகொண்டான், அரசக்குழி ஆகிய அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் பார்வையிட்டு கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். மேலும் காய்ச்சல், இருமல், தும்மல் ஆகிய நோய்களால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டார். 

 

 

 

Virudhachalam



அதனைத் தொடர்ந்து விருத்தாச்சலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகளவு சமூக இடைவெளியின்றி காத்திருந்தனர். 'ஏன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த அளவுக்குக் கூட்டம் உள்ளது. கூட்டத்தை குறைப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என அதிகாரிகளை எச்சரித்தார். 
 

அப்போது அதிகாரிகள் 'ஒரு முறை ஏலம் விடப்படுவதால் கூட்டம் அதிகமாக உள்ளது' எனக் கூறினார்கள். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், 'ஒரு நாளைக்கு இரண்டு முறை ஏலம் விட வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை உடனுக்குடன் கொள்முதல் செய்து உரிய விலை கொடுத்து அவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறினார். 
 

 

http://onelink.to/nknapp

 

தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதற்கு விவசாயிகள் "உளுந்து ஒரு மூட்டை ஏப்.22-ல் ரூபாய் 7,100 க்கு விற்பனையானது. ஆனால் ஏப்.23-ல் 6,500க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் மிகக் குறைந்த விலைக்கு உளுந்து விற்பனை ஆவதாக" விவசாயிகள் குற்றம்சாட்டினார். அதனைக் கேட்ட  அன்புச்செல்வன், அதிகாரிகளிடம் விலை குறைவு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கட்டுப்படியான விலை கிடைத்தால் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்றுக் கொள்ளலாம் அல்லது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வாடகை இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வைத்து விலை கிடைக்கும்போது வந்து விற்பனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். 
 

 

Virudhachalam


அதையடுத்து அவர் செய்தியாளர்களிடம், கடலூர் மாவட்டத்தில் முதலில் தொற்று இல்லை என இருந்த நிலையில் 13 பேர், 20 பேர், அடுத்து 26 பேர் என தற்போது ரெட் அலர்ட் நிலைக்குச் சென்று விட்டோம். இந்த நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு நாம் திரும்ப வேண்டும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். உலகமே ஏற்றுக்கொள்கின்ற ஒரே மருந்து சமூக இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை தான். அதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நடமாடும் காய்கறி கடை, மளிகைக் கடை, வீடு வீடாகச் சென்று வினியோகிப்பது என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 
 

பொதுமக்கள் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே வெளியில் வருவதற்கு வண்ண அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் மட்டும் வெளியே வரவேண்டும். இளைஞர்கள் தவறு செய்து வருகின்றனர். 100% ஒத்துழைப்பு கொடுத்தால் தான் வெற்றி காண முடியும். ஒரு சதவீதம் தவறு செய்தால் கூட சமூகத் தொற்றாக மாறிவிடும். 
 

பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். நம் மாவட்டம் தொடர்ந்து இரண்டாம் நிலையில் உள்ளது. ஆனால் நாம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம். அதனால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  அரசு ஊழியர்கள், மருத்துவத் துறை, காவல் துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை என ஒவ்வொரு அரசு ஊழியரும் சாலையில் நின்று உணவு உறக்கம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர். அதனைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் வெளியில் வர நேர்ந்தால் மாஸ்க் அணிய வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இளைஞர்கள் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டால் அது சாதாரணமானதல்ல. எதிர்காலத்தில் அரசு வேலை பாதிக்கும். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க முடியாது. 
 

 

 

 

கள்ளச்சாராயம்  காய்ச்சினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். ஒரு சிலர் செய்யும் தவறால் சமூகமே பாதிக்கும். விவசாயிகள் இந்த ஊரடங்கு உத்தரவால் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய சிரமத்தைப் போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். விவசாயிகளுக்காக தான் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் கூட்டமாக வரக்கூடாது. நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு தினங்கள் இந்த வளாகத்தைச் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்படும். அதன் பிறகே டோக்கன் பட்டுவாடா செய்யப்பட்டு விவசாயிகளின் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். 

 

 

Virudhachalam


சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தனியாக கரோனா நோய் ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை விழுப்புரத்தில் பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நமது மாவட்டத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் எந்த தேவையாக இருந்தாலும் தெரிவித்து தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்" என்றார்.
 

 

http://onelink.to/nknapp

 

இந்த ஆய்வின் போது சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் கவியரசு, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, ராஜேஷ், விருதாச்சலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எழில், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்