Skip to main content

'கிரிமினல் சட்டம் பாயும்' - ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

Published on 24/01/2024 | Edited on 24/01/2024

 

 'Criminal law will flow'- warning to omni buses

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குப் பதிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை காரணமாக மட்டும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட நிலையில், தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 'Criminal law will flow'- warning to omni buses

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து போன்றே தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. ஆனால் ஆம்னி பேருந்து சார்பில் பொங்கல் பண்டிகை காரணமாகப் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்துதான் முன்பதிவு செய்திருக்கின்றனர் என்று தங்களுக்கு மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்க விலக்கு கோரப்பட்டது. அதனை ஏற்று ஜனவரி 24 ஆம் தேதி வரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்து இயக்குவது தான் சரியாக இருக்கும். அதனால் 24 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இரவு முதல் சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், 'சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ இருக்கவோ ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை ஆம்னி பேருந்துகள் கொண்டு வரவேண்டும். ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்து டிக்கெட் முன்பதிவு செயலிகள் தக்க மாற்றங்களை செய்துவிட வேண்டும். இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயங்க வேண்டும். இ.சி.ஆர் சாலை மார்க்கத்தை தவிர்த்து மற்ற வழிகளில் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்பட வேண்டும். உத்தரவை மீறினால் மோட்டார் வாகன சட்டம் மற்றும் கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய தகவலை வழங்காமல் தேவையின்றி பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தினால் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்