கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக சட்டத்துறை செயலாளர் இன்பதுரை இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு உடல்கள் தகனம் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.