கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான்காவது முறையாக நேற்று (14/04/2020) நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் "இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதீங்க கரோனா வரும்" என்று சமூக வலைத்தளங்களில் பதிவு பரவியது. இதைப்பார்த்த ஜமா அத்தார்கள் உள்பட பல இஸ்லாமிய அமைப்பினரும் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகார்களைப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் உள்ளி்ட்ட போலீசார், கடந்த ஒரு வாரமாக வதந்தி பரப்பிய நபரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் கந்தர்வகோட்டை தாலுகா மங்களாகோயில் காசிநாதன் மகன் கார்த்திக் (33) என்ற இளைஞர் தான் வதந்தி பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த இளைஞரைக் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகினறனர்.