சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த, 55 வயது மருத்துவர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (19/04/2020) உயிரிழந்தார்.
அதன் பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவரது உடல் வேலங்காடு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, காவல்துறையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் கடந்த வாரம் வானகரம் தனியார் மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்கதையாகி வரும் நிலையில், "கரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவ பணியாற்றும் அனைவரையும் நாம் மதிக்க வேண்டும்" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.