வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவூர் ஊராட்சி. இந்த கிராம ஊராட்சியின் தலைவராக தேமுதிகவைச் சேர்ந்த உமாபதி என்பவரும் துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த அஜிஸ் என்பவரும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. "நாங்கள் ஆளும்கட்சி அதனால் என்னைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்" எனத் துணைத்தலைவர் நெருக்கடி தந்துள்ளார்.
“இங்க கட்சி எல்லாம் கிடையாது. இது உள்ளாட்சி, இங்க நான் விரும்பியபடி தான் நிர்வாகம் நடக்கும், இங்க நான் தான் தலைவர்” என்று உமாபதி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தலைவரும், துணைத் தலைவரும் முட்டிக்கொண்டனர். இவர்களின் பிரச்சனையால், பல வளர்ச்சி திட்டப் பணிகள் முடங்கியுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமிக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளது.
இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர், புகார்களின் அடிப்படையில் சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி மற்றும் துணைத் தலைவர் அஜிஸ் ஆகிய இருவரின் செக் பவரை ரத்து செய்தும், சீவூர் ஊராட்சியின் அடிப்படை அத்தியாவசிய நிர்வாகப் பணிகளுக்காக ஊராட்சி வங்கிக் கணக்குகளை கையாள குடியாத்தம் (திட்ட) வட்டார வளர்ச்சி அலுவலருக்கு செக் பவர் அளித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார். இப்படியொரு முடிவு எடுப்பதற்குப் பின்னாலும் அரசியில் உள்ளது என்கிறார்கள் தேமுதிகவினர்.