Skip to main content

கோவை மேயர் கல்பனா ராஜினாமா!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Coimbatore Mayor Kalpana resigns

கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மூவர் அதிமுக கவுன்சிலர்கள் ஆவர். இத்தகைய சூழலில்தான் கோவையின் முதல் பெண் மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்படி கல்பனா ஆனந்தகுமார் கோவை மேயராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மாநகராட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியின் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது தொடர்பான கடிதத்தை அவர் திமுக தலைமைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே கல்பனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இச்சம்பவம் கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்” - ராஜினாமா செய்த ரிஷி சுனக் உருக்கம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
I take responsibility for the failure Resigned Rishi Sunak 

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பின்பு நேற்று (04.07.2024) நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் இன்று (05.07.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சி 411க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது.

இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் பின்னடைவு அக்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கிடையே பிரதமராக புதிதாக பதவியேற்க உள்ள கியர் ஸ்டார்மருக்கு ரிஷி சுனர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பிரதமர் பதவியையும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியையும் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் பிரதமர் பதவியையும்  ரிஷி சுனக் இழந்தார். மேலும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தனது கடைசி உரையை டவுனிங் தெருவுக்கு வெளியே ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டிற்கு நான் முதலில் மன்னிபபு கேட்க விரும்புகிறேன். நான் இந்த பணிக்காக என் அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன். ஆனால் நீங்கள் இங்கிலாந்து அரசாங்கம் மாற வேண்டும் என நினைத்துள்ளீர்கள். இந்த தீர்ப்பு உங்களுடையது என்று தெளிவான சமிக்ஞையை அனுப்பியுள்ளீர்கள். இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என உருக்கமாக பேசியுள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ரிஷி சுனக் இந்தியத் தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிமுக பிரமுகர் கொலை; திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
AIADMK leader killed; 8 people including DMK executive arrested

சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

AIADMK leader killed; 8 people including DMK executive arrested

இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வார்டு கவுன்சிலரின் கணவரான திமுக நிர்வாகி சதீஷ் அந்தப் பகுதியில் லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சண்முகமும் சதீஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்து லாட்டரி விற்பனை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இவர்களுக்குள் தொழில் மற்றும் அரசியல் ரீதியாகவும் போட்டி ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து விரோதிகளாக இருந்து வந்தனர். இந்நிலையில் சதீஷ் தனிப்பட்ட முறையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததால் அது குறித்து சண்முகம் காவல்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சதீஷ் அதிமுக நிர்வாகி சண்முகத்தை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.