Skip to main content

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

coimbatore family return pudukkottai temple karur incident 

 

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கமல் இருதயராஜ் குடும்பத்தினர் மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செக்ஃபோன்சன் குடும்பத்தினர் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறிய ரக சரக்கு வாகனத்தில் புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர். பின்னர் வழிபாட்டை முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் கோவைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திருச்சிக்கு தார் ஏற்றிச் சென்ற மற்றொரு கனரக வாகனமும் வந்து கொண்டிருந்தது.

 

இந்நிலையில் கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தென்னிலை போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

முதற்கட்ட விசாரணையில் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கமல் இருதயராஜ் மனைவி முத்துலட்சுமி (வயது 38), பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செக்ஃபோன்சன் மனைவி நதியா (வயது 37) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த முத்துலட்சுமியின் குழந்தைகள் பாலச்சந்திரன் (வயது 12), கோவர்தனி (வயது10), மேலும் பன்னீர்செல்வம், ரூபன், வெங்கடேஷ், ரஜினி உள்ளிட்ட 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விபத்து குறித்து காவல்துறை அளித்த தகவலின் பேரில், உறவினர்கள் மருத்துவமனைக்கு வரவுள்ளனர். அதன் பிறகு முழு விவரம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்