உழைப்பை மூலதனமாக வைத்து அதன் மூலம் படிப்படியாக முன்னேறி தமிழகத்தின் தலை சிறந்த நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது சக்தி மசாலா நிறுவனம். மாற்று திறனாளிகள் வாழ்வில் நம்பிக்கை கொடுக்கும் வகையில் அவர்களை பணியில் அமர்த்தி அக்குடும்பங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குனரான சாந்தி துரைசாமிக்கு ஆகஸ்ட் 15 சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 'அவ்வையார்' விருது வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழகத்தில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் சிறந்த பெண் ஆளுமைகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான விருது தான் ஈரோடு சக்திமசாலா நிறுவனங்களின் இயக்குனரும் சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலருமான டாக்டர் சாந்திதுரைசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. சாந்தி துரைசாமி கடந்த 44 ஆண்டுகளாக சக்தி மசாலா சமையல் பொடிகள் தயாரிக்கும் நிறுவனத்தை அவரது கணவர் பி.சி.துரைசாமியுடன் இணைந்து நடத்தி வருகிறார். 1977 ல் சிறு தொழில் கூடமாக தொடக்கப்பட்ட இந்நிறுவனத்தில், தற்போது நூற்றுக்கணக்கான கிராமப்புற ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் என சாதாரண மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். சக்திதேவி சாரிட்டபிள் டிரஸ்ட், சக்தி மறுவாழ்வு மையம், மன வளர்ச்சி குன்றியோருக்கான சக்தி சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளி ஆகியவற்றை தமிழக அரசின் அனுமதியைப் பெற்று நடத்தி வருகிறார்கள்.
மேலும், 15 க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த பொது மக்கள் பயன்பெறும் வகையில் சக்தி மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை கொண்டு பொது மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் குறைந்த விலையிலும், ஆய்வகப் பரிசோதனைகள் சலுகைக் கட்டணத்திலும் இவர்களால் வழங்கப்படுகிறது. வழிக்காட்டி திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இந்நிறுவனத்தின் சார்பில் முழுமையான நூலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவியருக்கு கோடை கால பயிற்சிகள், ஆளுமைப் பண்பு வளர்க்கும் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. 41 அரசுப் பள்ளிகள் இவர்களால் தத்தெடுக்கப்பட்டு அங்கு பயிலும் 12,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் நலனுக்காக அப்பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள், கழிவறைகள், காம்பவுண்ட் சுவர்கள், குடிநீர் வசதிகள், தேவைகள் விளையாட்டு உபகரணங்களை வழங்கி பள்ளிகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கும் உதவி வருகிறார்கள்.
சிறந்த மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை, மேற்படிப்புக்கு நிதி உதவி எனக் கடந்த 21 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு உதவி செய்து வருகிறார்கள். தளிர் என்ற திட்டத்தில் இலவச மரக்கன்று வழங்குவதுடன், மரம் வளர்ப்போருக்குச் சென்ற 21 ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விருதுகளும் வழங்கப்படுகிறது. மனிதநேயம் மிக்க இவர்களின் சேவைகளுக்காக பல்வேறு தேசிய மாநில விருதுகள் ஏற்கனவே இவர்கள் பெற்றுள்ளார்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இப்படி பல்வேறு சமூகச் சேவைகளை தொடர்ந்து செய்து வரும் சக்தி மசாலா நிறுவன இயங்குனர் டாக்டர் சாந்திதுரைசாமிக்கு தமிழக அரசு இவ்வருடம் ‘அவ்வையார் விருது’ அறிவித்து சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சாந்திதுரைசாமிக்கு தமிழக அரசின் அவ்வையார் விருதை வழங்கினார். தகுதியான அரசும் அதன் முதல்வரும் தகுதியான பெண் ஆளுமைக்கு அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.