Skip to main content

இளம் விஞ்ஞானி எஸ்.எஸ். மாதவுக்கு முதலமைச்சர் பாராட்டு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

Chief Minister young scientist SS Madhav!

 

கையடக்க கணினி மைய செயலாக்கக் கருவியை (CPU) உருவாக்கிய இளம் விஞ்ஞானி எஸ்.எஸ். மாதவை நேரில் அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். 

 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (28/07/2021) தலைமைச் செயலகத்தில், திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மாதவ் சந்தித்து, தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். 

 

திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்துவரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ். மாதவ், 9ஆம் வகுப்பு பயின்றுவருகிறார். இவர் கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கணினி மொழிகளான Java, Python, C, C++, Kotlin ஆகியவற்றைப் படித்துள்ளார். இவர் கரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், கையடக்க Mini CPU கண்டுபிடித்துள்ளதாகவும், இதற்காக இரண்டு ஆண்டுகளாகக் கடுமையாக முயற்சித்து இம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்பதைக் கேள்விப்பட்ட தமிழக முதலமைச்சர், எஸ்.எஸ். மாதவ்-யை நேரில் அழைத்துப் பாராட்டினார். 

 

இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte Inda CPU Manufacturing Company என்ற நிறுவனத்தினைத் தொடங்கி, இணையதளம் (Online) மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவருகிறார் என்ற தகவலைக் கேட்டறிந்த  முதலமைச்சர், அம்மாணவனை வாழ்த்தினார். 

 

எஸ்.எஸ். மாதவ் கண்டுபிடிப்பினைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர், கணினி தொடர்பான அவரது உயர் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு அனைத்துவிதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது, எஸ்.எஸ். மாதவின் பெற்றோர்கள் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்