Skip to main content

கன்பியூஸாகி பா.ஜ.க வேட்பாளரை விமர்சித்த கங்கனா; அசால்டாக கேள்வி எழுப்பிய தேஜஸ்வி யாதவ்!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
Answered by Tejaswi Yadav for Kangana Criticizes BJP Candidate as Confused

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த மாதம், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும் போது மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை பதிவிட்ட தேஜஸ்வி யாதவ், “கூட்டணி கட்சி தலைவரான முகேஷ்  இன்று மீன் கொண்டு வந்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருப்பதால் வெறும் 10 - 15 நிமிடங்கள்தான் இடைவேளை இருக்கும். அதற்குள் சாப்பிட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நவராத்திரி நேரத்தில், தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவதாக பா.ஜ.க அவரை கடுமையாக விமர்சனம் செய்தது.

பா.ஜ.கவின் விமர்சனங்களுக்கு தேஜஸ்வி யாதவ் இன்று (10-04-24) தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பா.ஜ.கவில் உள்ளவர்கள் அறிவுத்திறனை சோதனை செய்வதற்காகவே இந்த வீடியோவை நாங்கள் பதிவு செய்தேன். அந்த வீடியோவை நான் பகிர்ந்திருந்தாலும், அது நவராத்திரிக்கு முந்தைய நாளான அன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பதை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதை கவனிக்காமல் எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. நாங்கள் நினைத்ததை சரி என்று நிரூபித்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Answered by Tejaswi Yadav for Kangana Criticizes BJP Candidate as Confused

இந்த நிலையில், தேஜஸ்வி யாதவ்வை விமர்சிப்பதாக நினைத்து தனது சொந்த கட்சி வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை, பாலிவுட் நடிகையும், பா.ஜ.க வேட்பாளருமான கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். மொத்தம் 4 மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஹிமாச்சலப் பிரதேசத்தில், ஒரே கட்டமாக ஜுன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் மாண்டி தொகுதியில், பாலிவுட் நடிகையும், பா.ஜ.க வேட்பாளருமான கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலை எதிர்கொள்ள கங்கனா ரனாவத் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில், மாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கங்கனா ரனாவத் பேசியதாவது, “கெட்டுப்போன இளவரசர்களிடம் கட்சி இருக்கிறது. அது சந்திரனில் உருளைக்கிழங்கு வளர்க்க விரும்பும் ராகுல் காந்தியோ, அல்லது போக்கிரித்தனம் செய்து மீன் சாப்பிடும் தேஜஸ்வி சூர்யாவோ, இந்த நாட்டின் மொழி மற்றும் கலாச்சாரம் புரியாதவர்களால் எப்படி இந்த நாட்டை வழிநடத்த முடியும்” எனப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  கங்கனா ரனாவத் பேசியதற்கு எதிர்வினையாற்றிய தேஜஸ்வி யாதவ், தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து, ‘யார் இந்தப் பெண்’ என்று பதிவிட்டிருந்தார். தேஜஸ்வி சூர்யா, கர்நாடாகா மாநிலம் பெங்களூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கன்வார் யாத்திரை உத்தரவு குறித்த சோனு சூட் பதிலுக்கு கங்கனா ரனாவத் பதிலடி!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Kangana Ranaut's response to Sonu suit on Kanwar Yatra order!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். அதன்படி, கன்வார் யாத்திரை வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது. 

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் அருகில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்களின் பெயர்கள் கொண்ட பலகைகள் வைக்க வேண்டும் என்று ஹரித்வார் காவல்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த யாத்திரையை மேற்கொள்பவர்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். 

இந்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் முஸ்லீம் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது. மேலும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், “ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்” என தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சோனு சூட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மண்டி தொகுதி எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒப்புக்கொள்கிறேன், ஹலாலுக்கு பதிலாக ‘மனிதநேயம்’ என்று மாற்றப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

பள்ளிச் சுவர் இடிந்து விபத்து; அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
School wall collapse accident in gujarat

குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நேற்று வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வகுப்பறையின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. 

இதில் சுவர் ஓரத்தில் அமர்ந்திருந்த சில மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் பதற்றமடைந்து, வகுப்பறையில் இருந்து வெளியேறினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஆசிரியர்கள், மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வதோதரா தீயணைப்பு துறையினர், சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்த மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதன் பிறகு மாணவர்கள் அனைவரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதில் படுகாயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.