ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு ரூ.484.45 கோடி செலவில் தனிக்குடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (04.02.2021) சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
ஈரோடு, பவானி, குமாராபாளையம், பள்ளிபாளையம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், ஈரோடு மக்களுக்கு விநியோகிக்கப்படும் காவேரி குடிநீர் மாசு படிந்திருந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில், பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை வரதநல்லூர் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து அதைச் சுத்திகரித்து விநியோகிக்கும் வகையில், ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, ஈரோடு மாநகராட்சியில் முந்தைய மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி தலைமையிலான மாமன்றக் குழு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.
இதையடுத்து, அந்தத் திட்டத்தின் கீழ் ரூ.484.45 கோடி அரசின் சார்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான பணிகள் சென்ற 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பிரமாண்ட குழாய்கள் மூலமாக சூரியம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கும், ஈரோடு வ.உ.சி.பூங்காவில் கட்டப்பட்டுள்ள 1.14 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட குடிநீர் தொட்டிக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கிருந்து மாநகராட்சியில் 21 புதிய மேல்நிலை தொட்டிகள், 46 பழைய குடிநீர் தொட்டிகள் மூலம் மொத்தம் 1.30 லட்சம் வீடுகளுக்கு, ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் என்ற அடிப்படையில், தண்ணீர் வழங்கப்படவுள்ளது.
இந்தப் பணிகள் நிறைவடைந்து கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்னும் சில இடங்களில் பணிகள் பாக்கியிருக்கும் நிலையில் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலமாக வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ஆகியோர் சென்னையிலிருந்தும் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் உள்ளிட்டோர் ஈரோட்டிலிருந்தும் பங்கேற்றனர்.
இதைப் போல தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் கட்டப்பட்ட192 அடுக்குமாடி குடியிருப்புகளையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.