சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொது தீட்சிதர்கள் தங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்புக் கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
குடியரசுத்தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலாளர், தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பொது தீட்சிதர்கள் கோயில்களை நிர்வகித்து மதம் மற்றும் பூஜைகளை செய்து வருகிறோம். கோயில் நிர்வாகம் மத உரிமைகள் மற்றும் நடைமுறைகள் அரசியலமைப்பு சட்டத்தின் 26- வது பிரிவின் படி, பாதுகாக்கப்படுவதாகவும் தீட்சிதர்கள் விளக்கியுள்ளனர். அதன்படியே, பொது தீட்சிதர்கள் தேவாரம், பஞ்ச புராணம் ஓதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியலைப்புச் சட்டம் கொடுத்துள்ள மத உரிமைகளில் பிறர் தலையிட முடியாது என்று கடந்த 2014- ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், சில குழுக்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்தும், தீட்சிதர்கள் குறித்தும் வெறுப்பு பரப்புரைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள தீட்சிதர்கள், அந்த குழுவினர் நடத்தி வரும் போராட்டங்களால் தங்கள் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.