திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யார், பெரணமல்லூர் பகுதிகள் பாமகவினர் பலமாக உள்ள பகுதிகளாகும். தீவிரமான பாமக தொண்டர்கள் கட்சி தலைமை மீது சமீபமாக அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருப்தியை சரிச்செய்ய பாமக தலைமை எந்த முயற்சியும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இனி பாமகவில் இருந்தால் தங்களுக்கு வளர்ச்சியில்லை, மக்களுக்கும் பாதுகாப்புயில்லை என கட்சி மாறி செயல்பட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ( பொறுப்பு ) பதவியில் தரணிவேந்தனை சில மாதங்களுக்கு முன்பு நியமித்தது. வந்தவாசி தொகுதியை சேர்ந்த தரணிவேந்தன், வந்தவாசி தொகுதியில் உள்ள பாமக அதிருப்தியாளர்களை திமுகவுக்கு கொண்டு வரும் வேலையை செய்ய துவங்கியுள்ளார்.
பாமகவில் அதிருப்தியாகவுள்ள வந்தவாசி ஒன்றியம் பாமக இளைஞர் அணியை சேர்ந்த மஞ்சுநாதன் தலைமையில் செம்பூர், அத்திப்பாக்கம், சேதாரகுப்பம் பகுதிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பாமகவினரை அக்டோபர் 2ந்தேதி கட்சிக்குள் இணைத்தார்.
தெள்ளார் ஒன்றியம் கீழ்வெள்ளியூர் ஊராட்சியை சேர்ந்த அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் திலகவதி குப்புசாமி தலைமையில் கீழ்வெள்ளியூர், ஜெங்கம்பூண்டி, தெள்ளார், சீயமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அதிமுகவினரும், வந்தவாசி கிழக்கு ஒன்றியம் குறிப்பேடு அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் ஏ.ராஜா தலைமையிலும், பாமகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏ.கார்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோரும், வந்தவாசி நகரம் கே.மணி தலைமையில் 50 நபர்களை திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்துக்கு அழைத்து வந்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திமுகவில் இணைத்தார்.
அப்பகுதியில் திமுக தற்போது பாமகவில் இருந்து விலகி வருபவர்களை வரவேற்று இணைத்துக்கொள்கிறது. இதனால் பாமகவின் வலிமையான பகுதியை திமுக உடைக்கிறதோ என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.