கரோனா எழுதிக்கொண்டிருக்கும் துயரக் கதைகளில் ஒன்று நெஞ்சை நெகிழவைப்பதாக இருக்கிறது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சங்கர் என்பவர், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கரோனா தொற்றுக்கு நடுவிலும் பரபரப்பாக இயங்கிவரும் கோயம்பேடு மார்கெட்டில், உடல் நலக்குறைவோடு, வேலைபார்த்து வந்த சங்கர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சிகிச்சையில் இருந்த சங்கர், திடீரென்று மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர், சங்கரின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தனர். கொடுங்கையூரில் இருந்த சங்கரின் மகன் நந்தகோபாலைத் தொடர்புகொண்ட இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், ”உங்கள் அப்பா கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இறந்துவிட்டார். உடலைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.
இதைக்கேட்டுக் கதறியழுத சங்கர் மகன்..” சார் நான் செக்யூரிட்டி வேலை பார்க்கிறேன். எனக்கும் லாக் டவுனால் வேலை இல்லை. வீட்டில் பசி, பட்டினியோடு இருக்கிறோம். எங்கள் அப்பாவை அடக்கம் செய்யக்கூட என்னிடம் காசு இல்லை” என்றார். இதைத்தொடர்ந்து மனம் உருகிய இன்ஸ்பெக்டர் , மனிதாபிமானத்தோடு சங்கரின் உடலை தானே வாங்கி, உரியமுறையில் அஞ்சலி செலுத்தி, தன் செலவிலேயே அடக்கம் செய்தார்.