நடிகர் விவேக் உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் விவேக் மரணத்துக்கு காரணம் என்று சிலர் சந்தேகம் எழுப்ப, அவர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று மருத்துவர்கள் விளக்கியிருந்தார்கள். இந்நிலையில், விவேக் தடுப்பூசி போட்டது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே முன் ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் நேற்று (19.04.2021) நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.