Skip to main content

தேர்தல் பத்திரம் ரத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Cancellation of Election Deed Welcome to CM MK Stalin 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியது.

அதில் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துக்களை தீர்ப்பாக வழங்கியுள்ளனர். அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பை வாசிக்கையில் “அரசை கணக்கு கேட்கும் உரிமை, நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19 கீழ் உட்பிரிவு 1 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநித்துவ சட்டம் மற்றும் வருமான வரி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போதைய விதிகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களையும் வெளியிட உத்தரவிடப்படுகிறது. தேர்தல் பத்திரங்களை வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

Cancellation of Election Deed Welcome to CM MK Stalin 

இந்நிலையில் தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சரியாக கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளிப்படையான தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும். இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தையும் சம நிலையையும் மீட்டெடுத்துள்ளது. இந்த தீர்ப்பு தேர்தல் அமைப்பின் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்