Skip to main content

‘மூளையைத் தின்னும் அமீபா’ - வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Brain-Eating Amoeba Guidelines Released

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில், “தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவிற்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “ கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளைத் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு இந்த தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது. 

சார்ந்த செய்திகள்