முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர், இங்கு இருக்கும் அவரது குடும்பத்தை கண்காணிக்க சொல்லிய வழக்கை பற்றி விவரிக்கிறார்.
அமெரிக்காவில் வேலை செய்து வரும் ஒரு நபர், இங்கு இருக்கும் தன்னுடைய வீட்டில் வசித்து வரும் மனைவி மற்றும் 6 மற்றும் 2 வயது குழந்தைகளை கண்காணிக்க சொன்னார். வசதி படைத்த அவரின் வீட்டில், சமையல் செய்ய மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள தனித்தனி ஆட்கள் இருந்தனர். குழந்தைகளை கவனித்து வந்த பணிப்பெண், வீட்டில் சில விஷயங்கள் தவறாக நடப்பதாக கூறி வேலை செய்ய விருப்பம் இல்லை என்று வெளிநாட்டில் இருக்கும் இவரிடம் கூறியிருக்கிறார். இந்த விஷயங்கள் மூலமாகத்தான் இவர் என்னை அனுகினார்.
அதன் பிறகு, நாங்கள் அவரது வீட்டை கண்காணிக்க தீவிரமாக செயல்பட்டு வந்தோம். காலையில் அந்த வீட்டில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது போன்ற வழக்கமான நிகழ்வுதான் நடக்கிறது. அதேபோல் மதியம் சமையல் செய்யும் பணிபெண், வெளியே செல்கிறாள். குறை சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் மாலை நேரம், அந்த குழந்தைகளின் அம்மா வெளியே செல்கிறாள். அவளது ஆடைகளும் சந்தேகிக்கும் வகையில் சற்று வித்தியாசமாக இருந்தது. தொடர்ந்து அந்த அம்மாவை பின் தொடர ஆரம்பித்தோம். சில இடங்களுக்கு சென்று, அவர் சில நபர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதன் பின்பு, அந்த அம்மா வீடு திரும்பும்போது மது பானங்கள், உணவு போன்றவற்றை வாங்கி, கூடவே இரண்டு ஆண்களையும் அழைத்து வருகிறாள். தொடர்ந்து, அந்த அம்மாவை பின் தொடரும்போது இரவு 10 மணிக்கெல்லாம் சில நேரம் வெளியே செல்கிறார். இவருக்கென்று தனிப்பட்ட முறையில் வீட்டை திறக்க நிறைய சாவி வைத்துக்கொள்கிறார். இப்படி மூன்று நாட்கள் தீவிரமாக அந்த அம்மாவை கண்காணித்ததில் மாலை முதல் அதிகாலையில் வரைதான் இதுபோன்ற சந்தேகிக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகள் இருந்தது. சில நாட்களில் வெளியிலிருந்து ஆட்கள் வீட்டினுள் வர ஆரம்பித்தார்கள். இந்த விசாரணையில் மொத்தம் 4,5 நபர்கள் தொடர்ந்து வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். இதனால்தான், அந்த இளம் பணிப்பெண் அங்கு வேலை செய்ய முடியாமல் சென்றுள்ளார்.
அந்த இரண்டு குழந்தைகளின் அம்மா வழி தாத்தா பாட்டியும் அதே தெருவில் தான் இருந்துள்ளார்கள். ஆனால், தனது மகள் சொல்பேச்சு கேட்கமாட்டாள் என்று அவர்கள் கூறியதால் தான் இந்த கேஸ் நம்மிடம் வந்துள்ளது. இதன் பிறகு இந்த கேஸில் முழு ரிப்போர்ட் ரெடி பண்ணி முதலில் குழந்தைகளை இதுபோன்ற சூழலிலிருந்து வளர்க்காமல் வீட்டில் பெரியவர்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று வெளிநாட்டில் வேலை செய்து வருபவரிடம் சில அறிவுரையை கூறி கேஸை முடித்தோம்.