திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும், நிலக்கோட்டையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் வாக்காளர்கள் எவ்வித பயமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து 100 சதவிகிதம் வாக்களிக்க தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போட்டிகளை நடத்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவிகளிடம் தேர்தலில் வாக்களிப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை வரையச் செய்து அதற்கும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறார்.
கிராம மக்களுக்கு புரியும் வகையில் தெருக்கூத்து, நாடகங்களை நடத்தி அவற்றின் மூலம் வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துரைத்தார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள், வர்த்தகர்கள் மூலம் நூறு சதவிகிதம் வாக்களிப்பதற்காக அவர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பு நாம் வாக்களிப்போம். இம்முறை திண்டுக்கல் மாவட்டத்தில் நூறு சதவிகிதம் வாக்களிப்பதற்கு நாம் துணைநிற்போம் என்ற வாசகத்துடன் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன.

மேலும் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் மூலம் விளம்பர பதாகைகள் வைக்க ஏற்பாடு செய்ததோடு ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம், 100சதவிகிதம் வாக்களிப்போம் என்ற வாசகத்துடன் பேட்ஜ்களை அணிய செய்தார். இதன்மூலம் மக்கள் மத்தியில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தர்கள் தாங்களாகவே முன்வந்து வாக்களிக்கும் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளனர். இதற்கு தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் அவர் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை இலக்காக கொண்டு தேர்தல் குறித்த ஆன்லைன் வினாடி-வினா அறிமுகப்படுத்தி உள்ளார். இதில் அனைவரும் கலந்து கொள்ள செய்யும் வகையில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் குறியீடுகள் உள்ள சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஒட்டப்பட்டுள்ள குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் தேர்தல் குறித்த 5 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு சரியான பதில்கள் அளிப்பவர்களுக்கு ரூ.50 பரிசு பீம் செயலி வழியாக மின்னனு பரிவர்த்தனை மூலமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதனால் இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் கொண்டு இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து ஜனநாயகத்தையும், ஜனநாயகத்தின் வலிமையையும் நிலைநாட்ட வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்களுக்கு வணிகர்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்ததோடு வாழ்த்துகின்றனர்.